Published:Updated:

வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லை; ஊர் மக்களால் 10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!

டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி
டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி

ஆந்திராவில் சாலை வசதி முறையாக இல்லாததால் கிராம மக்கள் டோலி கட்டி பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி ஒருவரை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஹகும்பேட்டா மண்டலத்தில் கின்னரலோவா எனும் குக்கிராமம் அமைந்துள்ளது. பேருந்து வசதி, குடிநீர் வசதி என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என எதுவும் கின்னரலோவா கிராமத்தில் இல்லாததால் கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சாலைகள் அமைத்துத் தருமாறு கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி
டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி

சாலை வசதி இல்லாததால் கின்னரலோவா கிராமத்தினர், தங்கள் மக்கள் நோய்வாய்ப்படும்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால்கூட `டோலி' கட்டியே தூக்கிச் செல்கின்றனர். இந்நிலையில், கின்னரலோவா கிராமத்தைச் சேர்ந்த சிதாரி சிலக்கம்மா (26) என்பவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, கிராம மக்கள் சிலக்கம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். ஆனால், கிராமத்துக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வரும் மருத்துவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தென்று பலமுறை வலியுறுத்தியதால், சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனமும் சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கின்னரலோவா கிராமத்துக்கு விரைந்திருக்கிறது. ஆனால், சாலை வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் ஹகும்பேட்டாவை தாண்டிச் செல்ல முடியவில்லை. அதையடுத்து, சிலக்கம்மா உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக நிலையை விளக்கிக் கூறி விட்டு 10 கிலோ மீட்டர் தூரத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)

மறுமுனையில் பிரசவ வலியில் சிலக்கம்மா துடித்துக் கொண்டிருக்க, கிராம மக்கள் சிலர் சேர்ந்து `டோலி' கட்டி அவரைத் தூக்கிக்கொண்டு கின்னரலோவாவிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் காத்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சற்றே கால தாமதமாக அனுமதிக்கப் பட்டாலும் மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தாய், சேய் இருவரது உயிரையும் காப்பாற்றிவிட்டனர்.

`இன்று எப்படியோ சிலக்கம்மாவை காப்பாற்றிவிட்டோம், ஆனால், இதே இன்னொருமுறை ஏற்பட்டால் என்ன செய்வோம்' என்று மனம் குமுறுகிறார்கள் கின்னரலோவா கிராம மக்கள். இது தொடர்பாக, மீண்டும் ஒருமுறை தங்கள் கிராமத்தின் அவல நிலையை விளக்கி மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். இந்த முறையாவது ஆட்சியாளர்கள் கிராமத்துக்குச் சாலை அமைத்துத் தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்!

அடுத்த கட்டுரைக்கு