Published:Updated:

`ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் ஏன்?!' - 6 மாத கால மௌனத்தைக் கலைத்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவுக்கு விரைவில் மூன்று தலைநகரங்கள் அமையவுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி ( Twitter/@YSRCPDMO )

ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனியாகப் பிரிந்த பிறகு ஆந்திராவின் தலைநகரை அம்மாநிலமே தேர்வு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டினார்.

அமராவதி திட்டம்
அமராவதி திட்டம்

அமராவதியை இந்தியாவே கண்டுவியக்கும் அளவுக்குச் சிறந்த தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமாக இருந்தது. இதையடுத்து அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். இவர் பதவியேற்ற பிறகு அமராவதியைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தலைநகராக உருவாக்கும் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது.

ஜெகனும் தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும் ஆந்திராவின் தலைநகர் குறித்தும் இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்று 6 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆந்திராவின் தலைநகர் பற்றி அவர் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ``ஆந்திராவுக்கு விரைவில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படலாம். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும் அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும் கர்னூல் சட்ட (நீதிமன்றம்) தலைநகரமாகவும் செயல்படும்” என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தொடர்ந்து பேசுகையில், “ஆந்திராவின் அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் 3 தலைநகரங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆந்திராவின் தலைநகரத் திட்டத்துக்காக நாங்கள் பல்வேறு நாடுகளில் ஆராய்ந்தோம். அப்போது தென் ஆப்பிரிக்காவில் மக்கள் மேம்பாட்டுக்காக மூன்று தலைநகரங்கள் அமைக்கப்பட்டுள்ள விஷயம் தெரியவந்து அதையும் ஆய்வு செய்தோம்.

Vikatan

நாமும் அதையே நடைமுறைப்படுத்தலாம் என ஆலோசனை செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு அனைத்தையும் ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும். அதன் அனைத்து அறிக்கைகளும் இன்னும் ஒருவாரத்துக்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஆந்திரா
ஆந்திரா

முன்னாள் அரசு அமராவதியில் 53,000 ஏக்கர் நிலத்தில் தலைநகரம் உருவாக்கப்படும் என்றும் அதற்காக ரூ.1.09 லட்சம் கோடி தேவை எனவும் கூறியிருந்தது. தற்போது நாங்களும் ரூ.1 லட்சம் கோடியில் தலைநகரங்களை விரிவுபடுத்த ஆலோசனை நடத்தியுள்ளோம். ஆனால், முறையான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற உடனடி அத்தியாவசிய தேவைகளை அளிக்காமல் தலைநகரை மட்டும் 20 சதுர கி.மீ பரப்பளவில் அமைப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதே ரூ.1லட்சம் கோடியில் ஆந்திராவின் நீர் ஆதாரத்தை பலப்படுத்த ரூ.60,000 கோடியும், கல்விக்காக ரூ.14,000 கோடியும், மருத்துவத்துக்காக ரூ.30,000 கோடியும் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தற்போது அமராவதியில் உள்ள ஆந்திராவின் உயர் நீதிமன்றத்தை கர்னூலுக்கு மாற்றவேண்டும் என்பது அம்மாநில வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அதையொட்டியே ஜெகன் ரெட்டி கர்னூலை சட்டத் தலைநகரமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விசாகப்பட்டினத்தில் சிறந்த கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாடு இருப்பதால் அதை நிர்வாக தலைநகராகவும் அமராவதி, மாநிலத்தின் மையப்பகுதியில் இருப்பதால் அங்கு சட்டமன்றம் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.