Published:Updated:

`மோஸ்ட் வான்டட்; கணித ஆசிரியர்; சோஷியல் மீடியா கில்லி!’ - காஷ்மீரில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் தலைவர்

ரியாஸ் நைக்கு
ரியாஸ் நைக்கு ( Twitter )

காஷ்மீரின் தெற்குப் பகுதி கிராமம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ரியாஸ் நைக்கு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-யுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். ஜம்மு - காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது இந்தத் தீவிரவாத அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினர்
பாதுகாப்புப் படையினர்
AP| Channi Anand

இந்த அமைப்பின் காஷ்மீர் பகுதி தலைவராகச் செயல்பட்டு வந்த புர்ஹான் வானியைப் பாதுகாப்புப் படையினர் 2016-ல் சுட்டுக்கொன்றனர். அதையடுத்து, அந்த அமைப்பின் காஷ்மீர் தலைவராக யாசீன் இட்டு என்பவர் பொறுப்பேற்றார். இவரையும் ஓராண்டு தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின், 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின் ஹிஸ்புல் அமைப்பின் தலைவரான ரியாஸ் நைக்கு, பாதுகாப்புப் படையினரின் ரேடாரில் சிக்காமல் தப்பி வந்தார். இந்தநிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் அவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

யார் இந்த ரியாஸ் நைக்கு?

உளவுத் துறைத் தகவல்களின்படி ஜம்மு - காஷ்மீரின் அவந்திப்பூர் பகுதியை அடுத்த டோகுன் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த ரியாஸ். பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், 2012-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அதன்மூலம் காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் இணைக்கும் வேலையைச் செய்து வந்தார். 32 வயதான ரியாஸ், தீவிரவாதம் தொடர்பான 11 வழக்குகளில் முக்கியக் குற்றவாளி.

ரியாஸ் நைக்கு
ரியாஸ் நைக்கு
Twitter

அவரது தலைக்கு ரூ.12 லட்சம் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு போலீஸ் அதிகாரிகளைக் கொன்ற வழக்கு, போலீஸாரைப் பதவி விலகுமாறு மிரட்டியது எனப் பல்வேறு விவகாரங்களில் ரியாஸ் மீது வழக்கு இருக்கிறது. 2017-ம் ஆண்டு உளவுத்துறை `ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருப்பவர்களில் அனுபவசாலி இந்த ரியாஸ் நைக்கு’ என்று இவரைப் பற்றி நோட் போட்டது. அந்த அமைப்பின் அமைதியான முகமாக காஷ்மீரில் அறியப்பட்ட ரியாஸ், சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது சாப்ட்வேர் உள்ளிட்ட கணினி சார்ந்த துறைகளிலும் வல்லுநர் என்கிறார்கள் காஷ்மீர் போலீஸார்.

என்கவுன்டரில் என்ன நடந்தது?

சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் தப்பி வந்தார் ரியாஸ். இவர் இருக்கும் இடம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு நேற்று இரவில் ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட இடத்தை ராணுவம், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீஸாரை உள்ளடக்கிய சிறப்புப் படை களத்தில் இறங்கியது. பெய்க்போரா பகுதியில் அவர் இருக்கும் இடம் சுற்றி வளைக்கப்பட்டது. இரவு முழுவதும் அவரது நடமாட்டம், அங்கிருப்பது ரியாஸ்தானா என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

ரியாஸ் நைக்கு
ரியாஸ் நைக்கு
Twitter

இந்தநிலையில், இன்று காலை 9 மணியளவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. மதியம் ஒரு மணி வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ரியாஸ் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர். அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை சுமார் 40 கிலோ வெடிமருந்துகள் மூலம் பாதுகாப்புப் படையினர் தகர்த்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் 10 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புர்ஹான் வானிக்குப் பின்னர் ஹிஸ்புல் அமைப்பின் மோஸ்ட் வான்டட் தீவிரவாதியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டிருந்த இவரை உளவுத்துறை `A++’பிரிவில் அடையாளப்படுத்தியிருந்தது.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மூன்று இடங்களில் நடத்திய சோதனையில் இதுவும் ஒன்று. பாம்போர் மாவட்டத்தின் ஷர்சாலி பகுதியில் தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

`இருமுறை கேலண்டரி விருது; 12 வயது மகள்!’- கர்னல் அஷுதோஷ் சர்மா நினைவுகள் பகிரும் குடும்பத்தினர்

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் என 22 பேரை இந்தியா இழந்திருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எல்லைப் பகுதியில் ஊடுருவல் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் மற்றும் மேஜர் ஒருவர், ராணுவ வீரர்கள் இருவர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவலர் ஒருவர் என 5 பேர் வீரமரணமடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு