`நிச்சயம் அவரை பெருமைப்படுத்துவேன்!’- கணவர் இறந்த ஒரே வருடத்தில் ராணுவத்தில் இணையும் மனைவி #Pulwama

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் உயிரிழந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவரின் மனைவியும் ராணுவத்தில் இணையவுள்ளார்.
பிப்ரவரி 14 , 2019 இந்தத் தேதியை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் அப்போது நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்காக இந்திய மக்கள் வருந்திக்கொண்டிருந்த நேரத்தில் பிப்ரவரி 18-ம் தேதி அதிகாலை அதே புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், ஒரு மேஜர் உட்பட நான்கு வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையில் இறந்த மேஜர் விபுதி சங்கர் தவுண்டியாலின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அவரின் மனைவி நிகிதா கவுல் பேசிய வார்த்தைகளும் அவரது செயல்களும் அடங்கிய வீடியோ வெளியாகி மொத்த இந்திய மக்களையும் கலங்கவைத்தது.
`தன் கணவர் உடலுக்கு அருகில் நின்று நீண்ட நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார் நிகிதா. பிறகு அவருக்கு முத்தமிட்டு, அருகில் சென்று இறந்த கணவருடன் பேசினார். இறுதியாக தன் கணவர் சங்கர் மற்றும் தாய்நாடு பற்றிப் பேசிவிட்டு `ஜெய்ஹிந்த்’ என்று அரங்கம் அதிர முழக்கம் எழுப்பினார். பின்னர் கதறி அழுதபடி `லவ் யூ’ என்று அவர் கூறிய வார்த்தைகள் சுற்றியிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மேஜர் விபுதி சங்கருக்கும் நிகிதா கவுலுக்கும் 2018, ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. தங்களின் முதல் வருடத் திருமணநாளை கொண்டாடக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில், நிகிதா Short Service Commission தேர்வு எழுதி அதற்கான நேர்காணலிலும் கலந்துகொண்டுள்ளார். தற்போது அவர் தகுதிப் பட்டியல் அறிவிப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அது வந்ததும் தன் கணவர் பாதையில் நிகிதாவும் இந்திய ராணுவத்தில் இணையவுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் மேஜர் விபுதி சங்கர் இறந்து சரியாக ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் தற்போது அவரின் மனைவியும் ராணுவத்தில் சேர ஆயத்தமாகிவிட்டார். காஷ்மீரில் பிறந்த இவர் முன்னதாக டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். தன் கணவர் இறந்த பிறகு ராணுவ உடையணிய வேண்டும் என்பதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் புல்வாமா தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சண்டையில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டபோது நிதிதா பற்றிய செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராணுவத்தில் இணையும் முடிவு பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியுள்ள நிகிதா, `` விபு என்பவர் நல்லொழுக்கத்தின் மனித உருவம். அன்பு, இரக்கம், துணிச்சல், புத்திசாலித்தனம் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற அனைத்திலும் சிறந்தவர். நான் நிச்சயம் அவரைப் பெருமைப்படுத்துவேன். நாம் வாழும் வரை நம் காதல் மறைந்துபோகாது, அவருடைய துணிச்சலான கதைகள் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். என்னுடைய இந்த முடிவுதான் நான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.