Published:Updated:

`ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் பதவி!’ - 3 மாத அவகாசம் கொடுத்த உச்ச நீதிமன்றம்

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

''ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும்'' என்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்திய ராணுவத்தில் உள்ள ஓர் உயர் அதிகாரி, தனக்குக் கீழ் இருக்கும் படையினருக்கு கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும். ஒரு கர்னல், 850 ராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு படைக்குத் தலைமைதாங்கி அதை வழிநடத்துவார். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழில்நுட்பரீதியில் இருக்கும் பணிகளில் மட்டுமே அதிகமாக பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும், அந்தப் பணிகளில் மட்டுமே அவர்களுக்கு உயர்பதவிகளும் வழங்கப்படுகின்றன. காலாட்படை, பீரங்கிப்படை போன்ற போர்செய்யும் படைகளுக்குப் பெண்கள் தலைமைதாங்க அனுமதிக்கப்படுவதில்லை.

பெண் அதிகாரிகள்
பெண் அதிகாரிகள்
ANI

ராணுவ நியமனத்தில், ஆண் பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி மற்றும் ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையில், மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் இணைகின்றனர். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றவாறு பெண்களைத் தளபதிகளாக ஏற்றுக்கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை.

மேலும், ராணுவத்தில் பெண்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. போர்க் காலங்களில், எதிரிகள் பெண்களைக் கடத்திச் செல்ல வாய்ப்புள்ளது. பெண்கள், உடலளவில் பலவீனமானவர்கள். தொடர் இடமாற்றம், மகப்பேறு போன்ற காலங்களில் பெண்களால் தலைமைப் பொறுப்பை சிறப்பாகச் செய்ய முடியாது’ என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரபாபு மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பதிலை ஏற்றுக்கொள்ள மறுத்த மனுதாரர்கள், `பெண்களின் உடல்திறன், தரவரிசை மற்றும் உளவியல் எதார்த்தங்கள் போன்றவை குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தை நிராகரிக்க வேண்டும்.

நாட்டின் கடுமையான நேரங்களில், இதே ராணுவத்தில் உள்ள பல பெண்கள் திறமையாகச் செயல்பட்டு விதிவிலக்காக இருந்துள்ளனர். அப்போது, பெண்கள் தைரியமாகப் போராடிய நிலையில், அவர்களுக்கு உயர் பதவிகள் மட்டும் வழங்கக் கூடாதா?' என்று கேள்வி எழுப்பினர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் உரிமைகள், பதவிகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கத்தில், ‘தற்போதுள்ள காலகட்டத்தில், பெண் பற்றிய ஆண்களின் மனநிலை முதலில் மாற வேண்டும். மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் குழப்பமானதாகவும், பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாட்டை மட்டுமே காட்டுவதாகவும், ஒரே மாதிரியான விளக்கமாகவும் உள்ளன.

`பெண் கமாண்டோக்கள் சொல்வதை ஆண்கள் கேட்கமாட்டார்கள்!' - உச்ச நீதிமன்ற வழக்கில் அரசு கொடுத்த விளக்கம்

ராணுவத்தில் பெண் அதிகாரிகளை ஈடுபடுத்துவது, ஒரு பரிணாம செயல்முறை. பெண்களின் உடலியல் அம்சங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெண் அதிகாரிகள் ஆண்களுக்கு கட்டளையிடும் நேரம் வந்துவிட்டது. பெண்கள், ஆண்களுடன் இணைந்து வேலைசெய்ய உள்ளனர்” என்று கூறி, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதை மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீனாட்சி லேகி
மீனாட்சி லேகி

இதற்கு, பெண் வழக்கறிஞர்களும் ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளும் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராகப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களுக்கு வானமே எல்லை” என்று வழக்கறிஞர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு