Published:Updated:

"TRP-யை மாற்ற பணம் கொடுத்தார் அர்னாப்!"- BARC முன்னாள் சிஇஓ வாக்குமூலம்!

BARC முன்னாள் சிஇஓ தாஸ்குப்தா வாக்குமூலம்!
BARC முன்னாள் சிஇஓ தாஸ்குப்தா வாக்குமூலம்!

TRP ஊழல் வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்திருக்கும் துணை குற்றப்பத்திரிக்கையில் இந்த வாக்குமூலம் இடம்பெற்றிருக்கிறது.

பிரபல ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி TRP ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கப் பல முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என மும்பை காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருந்தது. இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் ஆனந்த விகடன் கட்டுரைகளைப் படியுங்கள்.

தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது அர்னாப்!
டி.ஆர்.பி ஏற்றத்தான் தேசபக்தியா?

இந்த சூழலில் முன்னாள் BARC சிஇஓ-வான பர்த்தோ தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்குக் கைப்பட எழுதிக்கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில் TRP-யை மாற்ற அர்னாப் கோஸ்வாமி பணம் கொடுத்தார் என ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு விடுமுறை சுற்றுலாக்களுக்கு அவரிடம் 12,000 டாலர் பெற்றதாகவும் அது இல்லாமல் மூன்று ஆண்டுகளில் 40 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார், TRP-யை நிர்ணயிக்கும் BARC அமைப்பின் முன்னாள் சிஇஓ. இந்த TRP ஊழல் வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்திருக்கும் துணை குற்றப்பத்திரிக்கையில் இந்த வாக்குமூலம் இடம்பெற்றிருக்கிறது.

அர்னாப்
அர்னாப்

ஜனவரி 11-ம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த 3,600 பக்க குற்றப்பத்திரிக்கையில் BARC தொடர்பான தடயவியல் மற்றும் தணிக்கை அறிக்கை, அர்னாப் கோஸ்வாமி மற்றும் தாஸ்குப்தாவிற்கு இடையே நிகழ்ந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் (இதுதான் சமீபத்தில் வெளியில் கசிந்தது); BARC-ன் முன்னாள் ஊழியர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் உட்பட 59 பேரின் வாக்குமூலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அறிக்கையில் ரிபப்ளிக் டிவி மட்டுமல்லாமல், டைம்ஸ் நவ், ஆஜ் தக் (இந்தியா டுடே) ஆகிய செய்தி சேனல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்தக் குற்றப்பத்திரிக்கை பர்த்தோ தாஸ்குப்தா மட்டுமல்லாமல் முன்னாள் BARC COO ரோமிள் ராம்கர்ஹியா, ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் CEO விகாஸ் கன்சன்தனி ஆகியோர் மீதும் பதியப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் படி தாஸ்குப்தாவின் இந்த வாக்குமூலம் டிசம்பர் 27, 2020 அன்று மாலை 5.15 மணியளவில் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அவரின் விரிவான வாக்குமூலம் இதோ...

"எனக்கு அர்னாபை 2004-லிருந்தே தெரியும். டைம்ஸ் நவ்வில் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறோம். 2013-ல் BARC-ன் CEO-வாக நான் பொறுப்பேற்றேன். ரிபப்ளிக் டிவி தொடங்குவதற்கு முன்பே அது பற்றிய திட்டங்களை என்னுடன் அர்னாப் பகிர்ந்துகொள்வார்.

நல்ல TRP ரேட்டிங் பெற உதவ வேண்டும் என மறைமுகமாக என்னிடம் கேட்டுக்கொண்டார். TRP சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பது அர்னாபுக்குத் தெரிந்திருந்தது.
BARC முன்னாள் சிஇஓ பர்த்தோ தாஸ்குப்தா

நானும் என் டீமும் இணைந்து ரிபப்ளிக் டிவியை நம்பர் 1 ரேட்டிங்கிற்கு கொண்டு வந்தோம். 2017 முதல் 2019 வரை இதை நாங்கள் செய்தோம். இதற்காக என்னை மும்பை ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு 6000 டாலர்கள் கொடுத்தார். 2019-லும் இதே போன்று ஸ்வீடன், டென்மார்க் சுற்றுலாவுக்கு 6000 டாலர்கள் கொடுத்தார். இது இல்லாமல் 2017-ல் 20 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கையில் கொடுத்தார். 2018, 2019 என இரண்டு வருடங்களும் தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்."

தாஸ்குப்தாவின் வழக்கறிஞர் அர்ஜுன் சிங் பேசுகையில், "இந்த வாக்குமூலத்தை முற்றிலுமாக மறுக்கிறோம். இது காவல்துறை கொடுத்த அழுத்தத்தில் அவர் பேசியிருக்கக்கூடும். இதை ஒரு ஆதாரமாக நீதிமன்றம் எடுத்துக்கொள்வது" என்றார். இது குறித்து அர்னாப் கோஸ்வாமி தரப்பில் எந்த விளக்கங்களும் தரப்படவில்லை.

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி
Rafiq Maqbool

தொடக்கத்தில் சாதாரண முறைகேடாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த TRP ஊழல் வழக்கு ஒவ்வொரு நாளும் பூதாகரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பலரும், குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

செய்தி சேனல்களின் இந்தப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்... கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு