ஜனவரி 5 அன்று பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது அம்மாநில விவசாயிகளால் ஏற்பட்ட பாதுகாப்பு இடையூறு குறித்து, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஜனவரி 6 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார். அதில் “ஒரு நாட்டின் பிரதம மந்திரியின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்; பிரதமர் மோடி மீது அராஜகவாதிகள் நடத்திய இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் அதே ஜனவரி 6 அன்று பதில் ட்வீட்டாக சாய்னா நேவாலை “உலகின் subtle cock champion” என்று குறிப்பிட்டு; இவர்களைப் போல இந்தியாவைப் பாதுகாக்கும் நபர்கள் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இதே ட்வீட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிகானாவுக்கு அவமானம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம், சமூக வலைத்தளங்களில் நடிகர் சித்தார்த் பெண்கள் மீது வெறுப்பைக் காட்டுவதாகவும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டு அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேக்கா சர்மா மகாராஷ்டிரா போலீசாருக்கு உடனடியாக இந்த வழக்கை விசாரணை செய்யவும், நடிகர் சித்தார்த் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரேக்கா சர்மா, சித்தார்த்தின் கமெண்ட் சாய்னா நேவாலின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் விதமாக இருப்பதால் அவரின் ட்விட்டர் பக்கத்தை முடக்குமாறு ட்விட்டர் ரெசிடென்ஸ் குறைதீர்ப்பு அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு கடும் எதிர்ப்புகள் எழுவதையொட்டி இன்று மதியம் நடிகர் சித்தார்த் அவரது முந்தைய ட்வீட்ற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, அனைத்தும் கட்டுக்கதை. ஒரு கருத்தை தவறான முறையில் புரிந்துகொள்வது நியாயமற்றது. இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் எந்த கருத்தும் பேசப்படவும் உள்வாங்கப்படவுமில்லை என்று கூறியுள்ளார்.