Published:Updated:

சந்திரசேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு பெயர்!

சந்திரசேகர ஆசாத்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள்...

சந்திரசேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு பெயர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள்...

Published:Updated:
சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத் 1906-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சபுவா மாவட்டத்தில் பதர்க்கா என்ற ஊரில் சீதாராம் திவாரி, ஜக்ராணி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் தந்தை அலிஜார்பூரில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணியாற்றிவந்தார். இவர் தனது இளமைப் பருவத்திலேயே பழங்குடியினரிடமிருந்து முறையாக வில் விதையை கற்றுத்தேர்த்தவர். மேலும், காசியிலுள்ள பெனாரஸ் வித்யா பீடத்தில் சமஸ்கிருதம் கற்றார்.

சந்திரசேகர ஆசாத்
சந்திரசேகர ஆசாத்

1919-ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் இவரின் மனதில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட விதையை விதைத்தது. இதனையடுத்து, 1920-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்க்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. நீதிபதி அவரின் பெயர் விவரங்களைக் கேட்டபோது, எனது பெயர் ஆசாத் (விடுதலை), தந்தையின் பெயர் சுதந்திரம், வீடு சிறை என்று பதிலளித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவரின் பதிலில் கோபமடைந்த நீதிபதி சிறுவனைச் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார். அப்போது பேசிய அவர், ``நான் இப்படிச் சொன்னால் தான் என்னைச் சிறையில் அடைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்று கூறியபோது, நீதிமன்றம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. இதனில் அதிக கோபமடைந்த நீதிபதி, அவனுக்கு 15 சவுக்கடிகள் கொடுங்கள் என்று உத்தரவிட்டார். ஒவ்வொரு சவுக்கடியின் போதும், பாரத் மாதா கீ ஜெய் என்று வீரமுழக்கம் எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற இவரின் பெயர் சந்திரசேகர ஆசாத் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி 1922-ம் ஆண்டு ஒத்துழையாமை கொள்கையைக் கைவிட்ட பிறகும், சந்திரசேகர ஆசாத் தனது கொள்கையில் உறுதியாய் முழுமையான சுதந்திரத்தை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தார்.

இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அவர் அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த அமைப்பை வளர்ப்பதற்காகத் தனது சகாக்களுடன் இணைத்து பிரிட்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமான பொருள்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் தான் 1925-ம் ஆண்டு நடைபெற்ற ககோரி ரயில் கொள்ளையும் அடங்கும். சோசியலிச கொள்கைகளின் வழியிலேயே இந்தியாவின் சுதந்திரம் அமையவேண்டும் என்று எண்ணினார். ஆங்கிலேய அரசு எப்படியாவது இந்துஸ்தான் குடியரசு அமைப்பை ஒடுக்க வேண்டும் என்று தீவிரம் காட்டியது.

சந்திரசேகர ஆசாத்
சந்திரசேகர ஆசாத்

இந்த காலகட்டத்தில் தான், சந்திரசேகர ஆசாத்துக்கு, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் இணைத்து இந்துஸ்தான் குடியரசு அமைப்பை மறு உருவாக்கம் செய்து இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பு என்று மாற்றினர். இந்த அமைப்பின் ராணுவ பிரிவு தலைவராகச் செயல்பட்டுவந்தார் சந்திரசேகர ஆசாத். ஜான்சி அருகே உள்ள காடுகளில் இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சியை வழங்கினார். இந்த அமைப்பினர் வைஸ்ராய் வந்த வாகனத்தை குண்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்தனர். அதேபோல, லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்குக் காரணமான அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் இருப்பிடம் குறித்து தகவல் சொல்பவர்களுக்கு ரொக்க பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் கடந்த 1931-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சந்திரசேகர ஆசாத் அலகாபாத்தில் உள்ள ஆல்ஃபிரெட் பூங்காவில் தனது தோழர் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்தார். பணத்தாசையால் துரோகி ஒருவன் துப்பு கொடுத்ததால் அவரின் இருப்பிடத்தை ஆங்கிலேயர்கள் காவல்துறை சுற்றிவளைத்து. அந்த நிலையிலும், அந்த இடத்திலிருந்து சுக்தேவை தப்பிக்க வைக்க காவல்துறையினருடன் நீண்ட நேரம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

சந்திரசேகர ஆசாத் சிலை
சந்திரசேகர ஆசாத் சிலை

அவரின் காலில் குண்டடிபட்டதால் அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இறுதியில் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தனது துப்பாக்கியிலிருந்து ஒரே ஒரு தோட்டாவை வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டார். சந்திரசேகர ஆசாத் இறக்கும்போது அவருக்கு வயது 24 மட்டுமே. பின்னாளில் அவர் இறந்த ஆல்ஃபிரெட் பூங்காவுக்குச் சந்திரசேகர ஆசாத் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரை பெருமைப்படுத்தும் வகையில், அவரின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.