Published:Updated:

தொடரும் `தேவதாசி' முறை; ஆடல், பாடல், பாலியல் தொழில் - இது மகாராஷ்டிரா `முரளி'களின் கதை!

தேவதாசிகள்

புனே அருகிலுள்ள ஜிஜூரி என்ற இடத்தில் இருக்கும் கண்டோபா கோயிலை மையமாக வைத்துத்தான் இந்த முரளிகள், எல்லம்மாக்கள், தேவதாசிகள் உருவாகின்றனர்.

தொடரும் `தேவதாசி' முறை; ஆடல், பாடல், பாலியல் தொழில் - இது மகாராஷ்டிரா `முரளி'களின் கதை!

புனே அருகிலுள்ள ஜிஜூரி என்ற இடத்தில் இருக்கும் கண்டோபா கோயிலை மையமாக வைத்துத்தான் இந்த முரளிகள், எல்லம்மாக்கள், தேவதாசிகள் உருவாகின்றனர்.

Published:Updated:
தேவதாசிகள்

தேவதாசிகள் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கடவுளுக்கு சேவை செய்பவர்கள். இந்த தேவதாசிகள் முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சில பகுதிகளில் தேவதாசி முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மகாராஷ்டிராவின் அகமத் நகர், பாலி, ஜிஜூரி, சாங்கிலி, கோலாப்பூர், கர்நாடகாவின் குல்பர்கா, ஆந்திராவின் சில இடங்களில் தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இவர்கள் இடத்துக்குத் தக்கபடி `தேவதாசிகள்’, `முரளி’, `எல்லம்மா’ என அழைக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் பொதுவாக தேவதாசிகளை `முரளி’ என்றே அழைக்கின்றனர். புனே அருகிலுள்ள ஜிஜூரி என்ற இடத்தில் இருக்கும் கண்டோபா கோயிலை மையமாக வைத்துத்தான் இந்த முரளிகள், எல்லம்மாக்கள், தேவதாசிகள் உருவாகின்றனர். இந்தக் கோயிலுக்கு பெற்றோரால் நேர்த்திக்கடனாகக் கொடுக்கப்படும் பெண்கள் கடவுளை மணந்துகொண்டு கோயில் படிக்கட்டுகள் மற்றும் கோயிலைச்சுற்றி வசித்துக்கொண்டு பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சியில் கண்டோபாவின் கதைகளைப் பாடல்களாகப் பாடி பிழைப்பு நடத்துகின்றனர்.

வீடுகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் முரளிகளைக்கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவதற்கென்றே இங்கு ஏராளமான குழுக்கள் இருக்கின்றன. ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில் இந்தப் பெண்கள் பணத்துக்காகப் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளாகக் கருதப்படும் முரளிகள் பெரும்பாலும் ஏழைகளாகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

முரளிகள் குறித்து ஜிஜூரி கண்டோபா கோயிலில் பூசாரியாக இருக்கும் ஹரிச்சந்திராவைச் சந்தித்துப் பேசினோம். ``குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்தால் அதில் ஒன்றைக் கடவுளுக்கு சேவை செய்யக் கொடுத்துவிடுவதாக வேண்டிக்கொள்வது வழக்கம். அப்படி வேண்டிக்கொண்டவர்கள், பெண் குழந்தைகளுக்கு 11 வயதானவுடன் கோயிலுக்குக் கொடுத்துவிடுகின்றனர்.

தேவதாசிகள்
தேவதாசிகள்

இவ்வாறு கோயிலுக்குக் கொடுக்கப்படும் பெண்கள், கடவுளை மணந்துகொண்டு தேவதாசிகளாக கோயில்களில் சேவை செய்கின்றனர். தேவதாசிகளாக இருக்க விரும்பாதவர்கள் கோயிலில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்தப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்வதில்லை. தற்போது சிலர் விருப்பப்பட்டு மிகவும் அபூர்வமாகத் திருமணம் செய்துகொள்கின்றனர். ஜிஜூரியில் மட்டும் வயதானவர்கள் உட்பட 100 தேவதாசிகள் வரை இருக்கின்றனர். இவர்களில் 50-க்கும் அதிகமானோர் ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேவதாசியாக இருக்கும் கவிதா வாய்க்கரிடம் பேசியபோது, ``நாங்கள் எதுவும் படிக்கவில்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் நடந்தால் அல்லது குலதெய்வ வழிபாடு செய்யும்போது எங்களை அழைப்பது வழக்கம். நாங்கள் பூஜை செய்து கண்டோபா கதையைப் பாடல்களாகப் பாடி நடனமாடுவோம். இதில் கிடைக்கும் பணத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, ஒரு நிகழ்ச்சிக்கு 500 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை கொடுப்பார்கள். அதை நாங்கள் பிரித்து எடுத்துக்கொள்வோம். ஆண்களையும் சிலர் கோயிலுக்குக் கொடுப்பது வழக்கம். அப்படிக் கொடுக்கப்படுபவர்கள் எங்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். நாங்கள் அவர்களைச் சகோதரர்களாகக் கருதுகிறோம்" என்று தெரிவித்தார். வயதான சில முரளிகளைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் அரசுமீது மிகவும் அதிருப்தியில் இருந்தனர். தங்களுக்கு அரசு எந்தவித நலத்திட்ட உதவியும் செய்வதில்லை என்றும், வயதாகிவிட்டதால் தங்களுக்கு எந்தவித வாழ்வாதாரமும் இல்லை என்றும் வருத்தப்பட்டனர்.

சுருக்கம் விழுந்த முகத்துடன் ஒரு வீட்டில் ஆடுவதற்காக வீட்டுக்கு வெளியில் காத்திருந்த காந்தாய் என்ற 60 வயது முரளி நம்மிடம் பேசினார். ``எங்களுக்கென யாரும் கிடையாது. எங்களை வேறு எந்த வேலைக்கும் யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. கடவுளுக்கும், இந்தச் சமுதாயத்துக்கும் மட்டுமே சேவை செய்கிறோம். ஆனால் வயதான காலத்தில் வருமானம் இல்லாமல் கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பிச்சை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

வயதானவர்கள் வாழ வழியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். வீடுகளில் சென்று நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு குழுவிலும் ஐந்து பெண்கள் வரை இருக்கின்றனர். இவர்கள் மகாராஷ்டிரா முழுவதும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மகாராஷ்டிரா அரசு இந்த தேவதாசிகள் பற்றி ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய தனி கமிட்டி ஒன்றை அமைத்தது.

அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டத்தை மாநில அரசு இயற்றியிருக்கிறது. ஆனால், அந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் இன்னும் தேவதாசி முறை அமலில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எப்போது இந்தச் சட்டத்தை அரசு முழுமையாக அமல்படுத்தப்போகிறது என்று தெரியவில்லை. இன்னும் சிலர் சட்டவிரோதமாகத் தங்களது வீட்டுக் குழந்தைகளை தேவதாசிகளாக கோயில்களுக்குக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பது முரளிகளிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. தேவதாசிகளின் நலனுக்காகத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பாடுபடும் சிவசேனா எம்.எல்.ஏ நீலம் கோரேயிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``தேவதாசிகளை ஒழிக்கும் அரசின் நோக்கம் நல்லதுதான். ஆனால், அதை ஒழிக்கவோ அல்லது அவர்களுக்கு மறுவாழ்வளிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எத்தனை தேவதாசிகள் இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்புகூட இதுவரை நடத்தப்படவில்லை. கடவுளின் பெயரால் இந்தப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்" என்று தெரிவித்தார்.