Published:Updated:

`நலத்திட்டங்கள்; சுயமதிப்பீடு; அதிரடி கள ஆய்வு!' -டெல்லி அரியணையை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையைத் தாண்டி 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

`டெல்லி’ இந்தியாவின் தலைநகரம். நாட்டின் அனைத்து முக்கிய முடிவுகளும் இங்குதான் எடுக்கப்படுகின்றன. அதிக மக்கள் தொகை, கடுமையான போக்குவரத்து, காற்று மாசு போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் டெல்லி, கடந்த இரண்டு மாதங்களாக இடைவிடாத தொடர் போராட்டங்களையும் சந்தித்து வருகிறது.

டெல்லி
டெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டம், ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல், ஜே.என்.யூ மாணவர்கள் பிரச்னை என டெல்லியின் அனைத்து மூலைகளிலும் போராட்டக்குரல்கள் ஒலித்து வந்த நிலையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. பரபரப்பான போராட்டங்கள், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் என டெல்லி தேர்தல் நாடு முழுவதும் அதிகக் கவனம் ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்சியமைக்க, 36 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ இதுவரை எந்தத் தொகுதியிலும் வெற்றியோ, முன்னிலையோ பெறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தல், ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

டெல்லியில் தேர்தல் நிறைவு- மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி?  #NowAtVikatan

இதற்கு அந்தக் கட்சி, தங்களையே சுய மதிப்பீடு செய்து கொண்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலிருந்து ஒரு எம்.பி-யைக்கூட ஆம் ஆத்மி கட்சி பெறவில்லை. இந்தத் தோல்விதான் அவர்களுக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசாரம்
பிரசாரம்

ஆம் ஆத்மி கட்சி, நாடாளுமன்றத் தேர்தலின்போது மத்திய அரசையும் மோடி மற்றும் அமித் ஷாவை விமர்சிப்பதை மட்டுமே முக்கியமாகக் கொண்டு பிரசாரம் செய்துவந்தது. மேலும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டார். ஆனால், இதற்குக் காங்கிரஸ் ஒத்துழைக்காததால் தனியாகவே போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நடத்திய கள ஆய்வில் பிறரை விமர்சிப்பதும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முயன்றதுமே அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. இதனால், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் கவனமாக யாருடனும் கூட்டணி வைக்காமல் தைரியமாக, தனியாகக் களத்தில் இறங்கியது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதேபோல் பிரசாரத்தின்போதும் மத்திய அரசையோ வேறு யாரையும் பற்றி அதிகம் விமர்சிக்காமல், டெல்லி மக்களுக்கு தாங்கள் செய்த நல்ல விஷயங்கள் மற்றும் நலத் திட்டங்களைச் சுட்டிக்காட்டியே அனைவரும் வாக்கு சேகரித்துள்ளனர். இவர்களின் அதிரடி பிரசாரம் பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகளுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்தின் எதிரொலியாகவே தற்போது ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு