Published:Updated:

`பா.ஜ.க, காங்கிரஸை எதிர்த்த அரசு ஊழியர்!' -தேசியக் கட்சிகளை வாரிச்சுருட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளது.

‘அரவிந்த் கெஜ்ரிவால்’ - 10 வருடங்களுக்கு முன்பு இந்தப் பெயரை இந்தியாவுக்குள் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால், இன்று இந்தப் பெயர் காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்து 1992-ம் ஆண்டு மத்திய வருவாய்த்துறையில் வேலைக்குச் சேர்ந்தார் கெஜ்ரிவால். அங்கு பணிபுரியும்போதே அரசுத் துறைகளில் தகவல்கள் வெளிப்படையாக வழங்காமல் இருப்பதே ஊழலுக்கு வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டி அதை எதிர்த்துப் போராடினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பின்னர், பணியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்று டெல்லியை மையமாகக் கொண்டு `பரிவர்த்தன்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான முறையில் போராடினார். இதையடுத்து மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, பரிவர்த்தன் அமைப்பின் வேலைகளில் இறங்கினார். இதன் விளைவாக 2001-ம் ஆண்டு டெல்லியில் தகவல் பெரும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2005-ம் ஆண்டு இதே சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் இருக்காமல் அதுதொடர்பாக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா முழுவதும் பயணித்து தகவல் பெரும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கினார். தொடர்ந்து சமூகப் போராளி அன்னா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

பிறகு 2012-ம் ஆண்டு தனித்து நின்று ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கி, அடுத்த வருடமே (2013) டெல்லி தேர்தலைச் சந்தித்தார் கெஜ்ரிவால். அரசியல் பின்னணி இல்லாத அரவிந்த் கெஜ்ரிவால் அதேபோன்று அரசியல் பின்புலம் இல்லாதவர்களை மட்டும் தன் கட்சியில் இணைத்து அவர்களையே வேட்பாளர்களாகவும் அறிவித்தார்.

ஆம் ஆத்மி கூட்டம்
ஆம் ஆத்மி கூட்டம்

15 வருடங்களாக டெல்லியின் முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித் தொகுதியில் களமிறங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் தன் முதல் தேர்தலிலேயே அவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பிறகு அந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தன் முதல் தேர்தலிலேயே முதல்வராக அரியாசனம் ஏறினார் கெஜ்ரிவால்.

தொடர்ந்து 2014-ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜன்லோக்பால் (பணம் கையாடல், ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு மக்களே நேரடியாகத் தண்டனை வழங்குதல்) மசோதா தோல்வியடைந்தது. இதனால் அன்றைய தினம் இரவே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிட்டதாக அனைவரும் கருதினார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால், அவரது கட்சிக்காரர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக 2015-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலைத் தனியாகச் சந்தித்தது ஆம் ஆத்மி கட்சி. அந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவு 67 இடங்களில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை தன்வசப்படுத்திக்கொண்டார் கெஜ்ரிவால். அதுவரை சாதாரண மனிதராக இருந்த அவர், தேசிய கட்சிகளுக்குச் சவால்விடும் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை

`நலத்திட்டங்கள்; சுயமதிப்பீடு; அதிரடி கள ஆய்வு!' -டெல்லி அரியணையை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி

முழுமையாக ஐந்து வருடங்களையும் ஆட்சி செய்துவிட்டார் கெஜ்ரிவால். இந்த ஐந்து வருடங்களில் டெல்லி சந்தித்த பிரச்னைகள் ஏராளம். போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக ஒற்றை, இரட்டை இலக்கம் என்ற வாகன இயக்க திட்டத்தைக் கொண்டுவந்தார். குடிநீர் கட்டண தள்ளுபடி, மின்சார சலுகை போன்ற நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல பயனுள்ள திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் மனங்களைக் கவர்ந்தார்.

மாநிலத்தின் முதல்வரான இவர், மக்கள் பிரச்னைக்காக ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோது, கெஜ்ரிவாலைப் பார்க்க மறுப்பு தெரிவித்துவிட்டார் ஆளுநர். அதனால் அவர் வீட்டிலேயே மூன்று நாள்களுக்கும் மேல் தங்கியிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி ஆளுநரைக் கதிகலங்கச் செய்தார். டெல்லியில் நடந்த பல்வேறு விஷயங்களுக்கு ஆம் ஆத்மிதான் காரணம் எனப் பா.ஜ.க குற்றம்சாட்டி வந்தது. ஆனால், அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், அரசுப் பணிகளில் மட்டும் முழுக் கவனம் செலுத்தி வந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

காஷ்மீர் பிரச்னை முதல் தற்போது நடக்கும் ஷாகீன்பாக் போராட்டம் வரை பெரிய அளவில் எதற்கும் தன் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இருந்தும் அரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படும் அமித்ஷாவையும் பெரும் தேசியக் கட்சியான காங்கிரஸின் தேர்தல் வியூகத்தையும் அமைதியாக உடைத்தெறிந்துள்ளார் இந்த சாமானியன்.

இன்று நடக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலும் அசைக்க முடியாத வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியாசனத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பிரமாண்ட வெற்றி தேசிய அரசியல் முதல் மாநில அரசியல் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு