Published:Updated:

`மாணவியோடு காதல்; சமையலறையில் மண்டை ஓடு!’ - வேலூர் ரயில் நிலையத்தில் சிக்கிய ஆந்திர பேராசிரியர்

Representational image
Representational image

ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவரது கல்லூரி பேராசிரியரே கடத்திச் சென்று வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த தீரங்குல கிருஷ்ண மோகன் (33) என்பவர் மாணவியிடம் நட்பாகப் பழகி பின்னர் அவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், பேராசிரியரின் காதலை அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். ஒருவழியாகக் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் தங்கி கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

கிருஷ்ண மோகன்
கிருஷ்ண மோகன்

அங்கும் விடாமல் துரத்திச் சென்ற கிருஷ்ண மோகன் தொடர்ந்து தன்னைக் காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தி வந்துள்ளார். பேராசிரியரின் தொல்லை தாங்காமல் நடந்த அனைத்தையும் அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அப்பெண்ணை மீண்டும் கடப்பாவுக்கே அழைத்துவந்துவிட்டனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பெண்ணின் பெற்றோர் உறவினரின் திருமணத்துக்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த கிருஷ்ண மோகன், புர்கா அணிந்தபடி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, தான் அணிந்து வந்த புர்காவை அப்பெண்ணுக்கு அணிவித்து வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றுள்ளார்.

Vikatan

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டுச் சுதாரித்துக்கொண்ட பெற்றோர் அடுத்த நிமிடம் காவலர்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட காவலர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவரது வீட்டின் சமையலறையில் எலும்புக் கூடு, மண்டை ஓடு, கடத்தப்பட்ட பெண்ணின் துணி ஆகியவை இருந்துள்ளன. மேலும் கேஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு அதற்கு அருகில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக கேஸ் கசிவதைச் சரி செய்துள்ளனர்.

ஆந்திரா போலீஸ்
ஆந்திரா போலீஸ்

தொடர்ந்து பெண் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ண மோகன் பற்றி அறிந்துகொண்ட காவலர்கள் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை சோதனை செய்துள்ளனர். பின்னர், அப்பெண்ணைக் கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்து, ஒரு குழு நெல்லூரிலும் மற்றொரு குழு தமிழகத்தின் வேலூரிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது.

இறுதியில், வேலூர் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண்ணுடன் இருந்த கிருஷ்ண மோகனை காவலர்கள் கைது செய்து ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பெண்ணும் பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ண மோகனிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தன் காதலை ஏற்க மறுத்ததால் அந்தப் பெண்ணைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்ய நினைத்துள்ளார் கிருஷ்ண மோகன். கேஸ் வெடித்து அந்தப் பெண் தானாக உயிரிழந்தது போல் இருப்பதற்காகவே அவரது வீட்டில் சிலிண்டரை திறந்து வைத்து அருகில் மெழுகுவத்தி மற்றும் எலும்புக் கூட்டை செட் செய்துவிட்டு வந்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது உதவிப் பேராசிரியர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு