Published:Updated:

விசாகப்பட்டினம்: `சோதனை முயற்சி; 70 டன் எடை!’ - பிரமாண்ட கிரேன் சரிந்ததில் 11 பேர் பலி

கிரேன் விபத்து
கிரேன் விபத்து

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பிரமாண்ட கிரேன் சரிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் மத்திய அரசின் பொதுத்துறை கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகிறது. 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கு கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானம் மற்றும் பழுது பார்ப்பு, கடலோர கட்டமைப்புகளின் வடிவமைப்பு அவற்றின் கட்டுமானம் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

கிரேன் விபத்து
கிரேன் விபத்து

இந்நிலையில் இன்று பிற்பகல் 11.30 மணிக்கு இந்தக் கப்பல் கட்டுமான தளத்திலிருந்த பிரமாண்ட கிரேன் சரிந்து விழுந்ததில் 15 -க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் 11 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய அதிகாரபூர்வமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் சுமார் 70 டன் எடை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

`வெடித்துச் சிதறிய உலை; 2 மாதங்களில் 3வது நிகழ்வு!’ -  தவிக்கும் விசாகப்பட்டினம்

புதிதாக வாங்கப்பட்ட கிரேன் எவ்வளவு எடை வரை தூக்குகிறது என்பதற்கான சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. இந்தப் பணியில் அதிகாரிகளும் சில ஊழியர்களும் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். கிரேன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான எடையைத் தூக்க முயற்சி செய்யும்போது யாரும் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த போது சுமார் 20 பேர் கிரேனுக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், கிரேனுக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்குப் பிறகு விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த், அப்பகுதி காவல் துறை கமிஷனர் ராஜீவ் குமார் மீனா மற்றும் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாச ராவ் எனப் பலரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கிரேன் மீது 8 பேர் வரை இருந்ததாகவும் அதிக எடை காரணமாகவே கிரேன் கீழே சரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான முழுமையான காரணம் தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது மிக பெரும் விபத்து இது என்று கூறப்படுகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு... விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா?
அடுத்த கட்டுரைக்கு