Published:Updated:

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில்: புத்தாண்டு தரிசனம்; கூட்ட நெரிசல்; பக்தர்கள் 12 பேர் பலி!

வைஷ்ணவி தேவி கோயில்
News
வைஷ்ணவி தேவி கோயில்

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்தனர்.

ஜம்முவின் கேத்ராவிலுள்ள மலைக்கோயிலான வைஷ்ணவி தேவி கோயிலில் நேற்றிரவு பக்தர்கள் புத்தாண்டு சாமி தரிசனத்துக்காகத் திரளான அளவில் காத்திருந்தனர். அதிகாலையில் புத்தாண்டு பிறந்தவுடன் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரியும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது திடீரென, கருவறைக்கு வெளியில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர்.

காத்திருக்கும் பக்தர்கள்
காத்திருக்கும் பக்தர்கள்

இந்த நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பக்தர்கள் காயமடைந்தனர். அதிகாலை 2:45 மணிக்கு ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி தில்பக் சிங் கூறுகையில், ``பக்தர்கள் கருவறைக்கு வெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது" என்றார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் அடைக்கப்பட்டது. 26 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதோடு இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட கமிட்டி விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். உயிரிழந்தவர்கள் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz