Published:Updated:

தொடர்ந்து தீவிரமடையும் மழை; 20 பேர் உயிரிழப்பு - மீண்டும் வெள்ளத்தில் சிக்கிய கேரளா

சத்யா கோபாலன்

பலத்த மழை காரணமாகக் கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ளம்
கேரளா வெள்ளம்

கேரளாவில் கடந்த வருடம் பெய்த மழை வெள்ளத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இயற்கை சீற்றத்தில் சிக்கி தற்போதுதான் அம்மாநிலம் மீண்டு வந்துள்ளது. அதற்குள் இந்த வருடம் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

கேரளா வெள்ளம்
கேரளா வெள்ளம்

தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளான கேரளா, தமிழகத்தின் நீலகிரி, கோவை போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாகக் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாகக் கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகக் கேரளாவில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலைய ஓடுபாதையை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூணாரில் அதிகபட்சமாக 18 -20 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

கொச்சி விமானநிலையம்
கொச்சி விமானநிலையம்

ராகுல்காந்தியின் தொகுதியான வயநாடுதான் மற்ற மாவட்டங்களைவிட அதிக சேதத்தைச் சந்தித்துள்ளது. மேடப்பள்ளியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் என நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

Vikatan

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கனமழை பொழிந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வர் ஆலோசனை கூட்டம்
முதல்வர் ஆலோசனை கூட்டம்

கேரளாவின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் விமானப்படையினரின் உதவியைக் கோரியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 450 பேர் உயிரிழந்த நிலையில் அதன் நினைவு தினம் இந்த வருடம் அனுசரிக்கப்படவிருந்தது. ஆனால், அதற்குள் மழை மீண்டும் கேரளாவை மூழ்கடித்துள்ளது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.