Published:Updated:

ஓடும் ஜீப்பில் தவறிவிழுந்த குழந்தை; பேய் எனப் பதறிய வனத்துறை! -மிரளவைத்த கேரள செக்போஸ்ட் காட்சிகள்

வனத்துறை செக்போஸ்ட் அருகே இந்தச் சம்பவம் நடந்ததால், அந்தக் குழந்தையை வனத்துறையினர் மீட்டதாகச் சொல்லப்பட்டது.

குழந்தையை மீட்கும் ஆட்டோ டிரைவர்
குழந்தையை மீட்கும் ஆட்டோ டிரைவர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கம்பிளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு ஜீப் ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தனர். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு ஜீப்பில் தாய் அமர்ந்து இருந்திருக்கிறார். பயணக் களைப்பில் அவர் தூங்கியபோது, குழந்தை அவர் மடியிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த பின்னர், ஏறக்குறைய 50 கி.மீ பயணம் செய்த பிறகே குழந்தை இல்லாதது அந்தக் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது.

குழந்தை
குழந்தை

இதையடுத்து, குழந்தையைக் காணவில்லை என வெள்ளத்தூவல் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். முன்னதாக மூணாறு அருகே உள்ள ராஜமலை அருகே வரும்போது காட்டுப்பகுதியில் குழந்தை ஜீப்பில் இருந்து கீழே விழுந்துள்ளது. ஜீப்பில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்திருக்கிறது. வனத்துறை செக்போஸ்ட் அருகே இந்தச் சம்பவம் நடந்ததால், அந்தக் குழந்தையை வனத்துறையினர் மீட்டதாகச் சொல்லப்பட்டது.

இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஜீப்பில் இருந்து விழுந்த பிறகு குழந்தை தவழ்ந்து அருகே உள்ள இடங்களுக்குச் செல்கிறது. அப்போது பணியில் இருந்த வனத்துறையினர் குழந்தையின் அசைவுகளைப் பார்த்து முதலில் பேயாக இருக்கலாம் என நினைத்து குழந்தையை மீட்கத் தயங்குகின்றனர். பின்னர் அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி அதன் டிரைவரிடம், ` அது பேயா?' எனச் சோதிக்கச் சொல்கின்றனர்.

பயந்து ஓடும் வனத்துறை அதிகாரி
பயந்து ஓடும் வனத்துறை அதிகாரி

அப்போதும், ஒரு காவலர் அந்தக் குழந்தையைப் பேய் என நினைத்துக்கொண்டு பயந்து ஓடி வருகிறார். பிறகு குழந்தையை ஆட்டோ டிரைவரே மீட்டுக்கொண்டு வருகிறார். குழந்தையை பேய் என நினைத்து வனத்துறை காவலர்கள் பயந்து ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதேநேரம் குழந்தையைத் தைரியமாகச் சென்று மீட்ட ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.