Published:Updated:

வலியில் துடித்த கர்ப்பிணி; பிளாட்பாரத்தில் சென்ற ஆட்டோ! - உதவி செய்த ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

ரயில்வே விதிகளுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் என்ற வழக்கில் கைதான கவாட் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடைமேடையில் ஆட்டோ
நடைமேடையில் ஆட்டோ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள விரார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாகர் கம்லக்கர் கவாட் (Sagar Kamlakar Gawad). 35 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்துவருகிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை ரயிலிலிருந்த ஒரு பெண்ணுக்கு உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

பெயர், அடையாளம் அறியப்படாத ஓர் ஆணும், கர்ப்பிணிப் பெண்ணும் ஞாயிற்றுக் கிழமை காலை ரயிலில் பயணம் செய்துள்ளனர். பலத்த மழை காரணமாக ரயில் செல்வதில் தாமதம் நிலவியுள்ளது. ரயில் விரார் ரயில் நிலையத்துக்கு முன்னதாக வந்துகொண்டிருக்கும்போது ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது என்ன செய்வதெனத் தெரியாமல் கணவர் தவித்துள்ளார்.

அதற்குள் விரார் ரயில் நிலையம் வந்துள்ளது. உடனடியாக கணவர், ரயிலிலிருந்து இறங்கி அருகிலிருந்த அதிகாரிகளிடம் உதவி கேட்டுள்ளார். யாரும் பெரிதாக கண்டுகொள்ளாததால் வெளியில் சென்று ஆட்டோ டிரைவரான கவாட்டிடம் உதவி கேட்டுள்ளார். கர்ப்பிணியை அழைத்துவர ரயில்நிலைய நடைபாதையில் ஆட்டோவை ஓட்டிவந்து அந்தப் பெண்ணை பத்திரமாகக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அந்தப் பெண்ணுக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

ஆட்டோ - மாதிரி புகைப்படம்
ஆட்டோ - மாதிரி புகைப்படம்

இதையடுத்து, ரயில் நிலைய நடைபாதையில் ஆட்டோ ஓட்டிய காரணத்துக்காக கவாட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ``கவாட் நல்ல நோக்கத்துக்காகத்தான் நடைமேடையில் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். ஆனால், அவர் விதிகளை மீறி ஓட்டியதால் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்” என ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரவீன் குமார் தெரிவித்துள்ளார். நடைமேடையில் ஆட்டோ செல்லும் வீடியோ அம்மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது.