மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவருகிறது. 2018-19-ம் நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் 7,600 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியாவை முழுமையாகத் தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீர் சிங் புரி, “ ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதிகொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலர், இதை வாங்குவதற்குத் தயாராக உள்ளனர். தினமும் பலரிடமிருந்து போன் வருகிறது.
ஆனால், சிறந்த ஒப்பந்தத்துக்காகக் காத்திருக்கிறோம். குறுகிய காலத்துக்குள்ளேயே இதை முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஏர் இந்தியா நிறுவனத்தை யார் வாங்கினாலும் அவர்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள். அவர்கள், வலுவான தனியார்துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும்.

ஏர் இந்தியா விமான இயக்கம் இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எந்தவித இடையூறுகளும் இல்லை. ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டாலும் அது இந்தியர்களின் கைகளில்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம்செய்தது. முக்கிய விமான நிலையங்களிலிருந்து விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.