Published:Updated:

``எங்களுக்கு நிலம் கொடுக்க விரும்பினால்?!.."- 5 ஏக்கர் குறித்து முஸ்லிம் அமைப்புகள்

``அரசு கையகப்படுத்திய அந்த 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் முன்னாள் பாபர் மசூதி மற்றும் ஷிலன்யாஸ் ஆகியவை அமைந்துள்ளன.''

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்தி பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி
அயோத்தி

இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணம் அளித்திடும் வகையில், 5 ஏக்கர் நிலம் அளிக்கப்பட வேண்டும். இதில் அவர்கள் தங்கள் மத வழிபாட்டை நிறைவேற்றும் விதிமாக மசூதி கட்டிக் கொள்ளலாம். அயோத்தியில் ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள நிலத்திலிருந்து மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வஃக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும். மூன்று மாத காலத்திற்குள், தங்களுக்கு ஒதுக்கப்படும் 5 ஏக்கர் நிலத்தில் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம். இந்த இடம் சன்னி வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த 5 ஏக்கர் நிலம் இஸ்லாம் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பாபர் மசூதி வழக்கில் ஒருதரப்பாக இருந்த ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் இந்த நிலம் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், ``பாபர் மசூதி நிலத்துக்காகவே நாங்கள் போராடினோம். வேறு எந்த நிலத்துக்காகவும் இல்லை. மசூதிக்காக வேறு எந்த இடமும் எங்களுக்குத் தேவையில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட 5 ஏக்கர் நிலத்தையும் கூட ராமர் கோயில்கட்ட வழங்கத் தயாராகவே இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

அயோத்தி
அயோத்தி

அயோத்தியில் உள்ள முஸ்லிம் மதகுரு மவுலானா ஜலால் அஷ்ரப் என்பவரோ, ``எந்த ஒரு அரசையும் நம்பி நாங்கள் இல்லை. எங்களால் நிலம் வாங்கி மசூதி கட்டிக்கொள்ள முடியும். நீதிமன்றமும், அரசும் எங்களின் உணர்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என விரும்பினால் இந்த ஐந்து ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப்பட்ட அந்த 67 ஏக்கர் நிலப் பகுதியிலேயே வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். இதேபோல் இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி, ``எங்களுக்கு நிலம் கொடுக்க விரும்பினால் எங்கள் வசதிக்கேற்ப அந்த 67 ஏக்கர் நிலப் பகுதியிலேயே கொடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

டாக்டர் யூசுப் கான் என்னும் அயோத்தி முஸ்லிம் சமூக ஆர்வலர் பேசும்போது, ``எங்களின் மதத் தேவைகளை கவனித்துக்கொள்ள அயோத்தியில் போதுமான மசூதிகள் உள்ளன. ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியதால், இனி இந்த விவகாரம் முடிந்த ஒன்று'' எனத் தெரிவித்துள்ளார். அகில இந்திய மில்லி கவுன்சிலின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த அயோத்தி வழக்கில் ஒரு கட்சியுமான கலிக் அஹ்மத் கான் பேசும்போது, ``அரசு கையகப்படுத்திய அந்த 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் முன்னாள் பாபர் மசூதி மற்றும் ஷிலன்யாஸ் ஆகியவை அமைந்துள்ளன.

அயோத்தி
அயோத்தி

மேலும் ஒரு இடுகாடு ஒன்றும், நான்கு குவாநாதி மசூதி, 18-ம் நூற்றாண்டு சூஃபி துறவி காஸி குத்வா என்பவரது கல்லறை மாடம் ஆகியவையும் உள்ளன. இவற்றில் சில அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் இந்தப் பகுதிக்குள் ஐந்து 5 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க வேண்டும்" என்றார். அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஹாஜி ஆசாத் அஹ்மத் கூறும்போது, ``பாபர் மசூதிக்கு ஈடாக எந்த நிலத்தையும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் நிலத்தை நன்கொடையாக விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.