Published:Updated:

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்

அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு
09 Nov 2019 1 PM

தீர்ப்பால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை!

மோடி
மோடி

`அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைப் பேண வேண்டும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேசபக்தியை வலுப்படுத்துங்கள். அதற்கான நேரம் இது' என்று பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

09 Nov 2019 12 PM

மறுசீராய்வு மனு!

வழக்கறிஞர் ஜிலானி
வழக்கறிஞர் ஜிலானி
ANI

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி, ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பில் எங்களுக்கு திருப்தியில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக வாசித்தபின்னர், மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதிராக எங்கும் போராட்டம் நடத்தக் கூடாது'' என்றார்.

09 Nov 2019 10 AM

முக்கிய அம்சங்கள்

இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒருமித்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும் என்று கூறிய அவர் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

* குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது.

* ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது

*அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது.

* அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.

* மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது.

* *அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.

* 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்

* அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அஹோரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை

* மதநம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை

* நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.

* 1857ம் ஆண்டுக்கு முன்புவரை, இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் வழிபடத் தடையில்லை.

* 1857-ல் கட்டத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

* மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாம் முறைப்படி இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

*வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவு

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

09 Nov 2019 10 AM

ஒருமித்த கருத்து! - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதிகள்
நீதிபதிகள்

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதனால், ஒருமித்த தீர்ப்பளிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம்

09 Nov 2019 10 AM

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

09 Nov 2019 10 AM

உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

Amith sha
Amith sha

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதையொட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத் துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

09 Nov 2019 10 AM

பாதுகாப்பு வளையத்தில் உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ANI

அயோத்தி தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தீர்ப்பு வழங்கப்படும் தலைமை நீதிபதி அமர்வு அறை இதுவரை திறக்கப்படவில்லை. அறை திறக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த அறையின் முன்பே வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குழுமியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

09 Nov 2019 9 AM

அமைதிகாக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி, தீர்ப்பு எதுவாக இருப்பினும் தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதல்வர் அறிக்கை
முதல்வர் அறிக்கை
09 Nov 2019 9 AM

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் டிசம்பர் 10ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. `தீர்ப்பு எதுவாக இருந்தாலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்விநிலையங்களும் நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விடுமுறை அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

09 Nov 2019 9 AM

வழக்கின் பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அஹாரா ஆகிய 3 அமைப்புகளுக்கும் அந்த நிலத்தை சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 40 நாள்கள் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டநிலையில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சனிக்கிழமை (9-11-2019) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.