Published:Updated:

1,125 கோடி ரூபாய் நிவாரணம்... கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அதிகம் செலவழித்த ஒரே இந்தியர்!

அசிம் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி

மக்களின் வாழ்வாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் ஒருசேர பாதித்துள்ள கொரோனாவின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வருடக்கணக்கில் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி இந்தியா என உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கிப் போராடி வருகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,000 கடந்து சென்று கொண்டிருக்க நோய் தீவிரத்தைத் தணிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் ஒன்றினை வைத்தே அரசுகளும் அதிகாரிகளும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

நோய்ப் பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுகளால் மக்கள் உயிர் காக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தினக்கூலிகள் மற்றும் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பெரும்பாலான தொழிற்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் உலகப் பொருளாதாரம் வரலாற்றில் இதுவரை காணாத பெரும் சரிவையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. ஏற்றுமதி இறக்குமதி என எல்லாம் முடங்கியுள்ள இந்த நிலையில் பல உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் ஒருசேர பாதித்துள்ள கொரோனாவின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வருடக்கணக்கில் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் பலவும் இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க நிதி இல்லாமல் திணறி வருகின்றன. ,உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனாவால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்க மறுபுறம் முக்கியத் தொழிலதிபர்கள் பலரும் தங்கள் பங்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடங்கி இந்தியாவின் அம்பானி,அதானி வரை பிரபல தொழிலதிபர்கள் பலரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அப்படி அவர்கள் அளிக்கும் நிதிகளின் மூலம், கொரோனா தடுப்புக் கவசங்கள் வாங்குவது, பரிசோதனைக் கூடங்கள் அமைப்பது, மருத்துவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பது, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது எனப் பல வழிகளில் அந்தந்த நாட்டு அரசுகள் தொழிலதிபர்கள் அளிக்கும் நிதிகளைத் திறம்படப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் உலகளவில் கொரோனாவுக்கு அதிக நிவாரண நிதி வழங்கிய 10 தொழிலதிபர்களின் பட்டியலை பிரபல பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான ஃபார்ச்யூன் தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டார்சீ இருக்கிறார். அவர் சுமார் 100 கோடி அமெரிக்க டாலர்களை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஜேக் டார்சீ அளித்துள்ள நிவாரண நிதி அவரின் நிகர மதிப்பில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் பில்கேட்ஸ் இரண்டாம் இடம் வகிக்கிறார். உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமான 'பில் & மெலிண்டா கேட்ஸ் தொண்டு அமைப்பின்' சார்பாக பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து சுமார் 25 கோடி அமெரிக்க டாலர்களை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பில் கேட்ஸுக்கு அடுத்தபடியாக இருப்பது விப்ரோ குழுமத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி ஆவார். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி கொரோனா நிவாரண நிதிக்கு இந்திய மதிப்பில் சுமார் 1,125 கோடி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 'அசிம் பிரேம்ஜி அமைப்பின்' வழியாக இந்திய மதிப்பில் 1000 கோடியும், விப்ரோ குழுமத்தின் சார்பில் முறையாக 125 கோடியும் அரசின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். மேலும் ஃபார்ச்யூன் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கும் ஒரே இந்தியர் அசிம் பிரேம்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

அசிம் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி

அதேபோல் இந்தியாவில் அதிகப்படியான தொகையை நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பதும் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியே. அம்பானி, அதானி, ரத்தன் டாட்டா என இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள் பலரை விடவும் அதிக நிதி உதவி அளித்துள்ள அசிம் பிரேம்ஜி ஃபார்ச்யூன் நிறுவனத்தின் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸை விடவும் அதிக தொகையை நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். பட்டியலில் அசிம் பிரேம்ஜிக்கு அடுத்தபடியாக ஜார்ஜ் சோரோஸ், ஆண்ட்ரு ஃபாரஸ்ட்,ஜெப் ஸ்கோல், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மைக்கேல் டெல் உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதுதொடர்பாக எகனாமிக் டைம்ஸுக்குப் பேட்டியளித்துள்ள அசிம் பிரேம்ஜி, ``புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகளும் வலிகளும் மன்னிக்கமுடியாத கொடூரம். தொழிலாளர் சட்டங்களில் மாநில அரசுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் தொழிலாளர் பாதுகாப்புக்கு எதிரானது. இந்த நேரத்தில் ஊரக வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவது மிக முக்கியமான நகர்வாக இருக்கும். அதுமட்டுமன்றி, பொது விநியோகம் மூலமாக, 3.6 மாதங்களுக்கு எண்ணெய், தானியம், உப்பு, மசாலா, சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு