Published:Updated:

`நன்கொடையில் முறைகேடு செய்துவிட்டார்!' - யூடியூபர் மீது `பாபா கா தாபா’ காந்தா பிரசாத் புகார்

காந்தா பிரசாத் மற்றும் கவுரவ் வாசன்
காந்தா பிரசாத் மற்றும் கவுரவ் வாசன்

``தங்களுக்கு வந்த உதவித் தொகையில் கவுரவ் வாசன் முறைகேடு செய்துவிட்டார்’ என மால்வியா நகர் காவல் நிலையத்தில் காந்தா பிரசாத் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

டெல்லி மால்வியா நகரில் `பாபா கா தாபா’ என்ற பெயரில் சிறிய அளவிலான உணவகம் நடத்தி வரும் 80 வயது முதியவரான காந்தா பிரசாத்தும் அவரின் மனைவியும், `கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம்’ எனக் கண்ணீருடன் பேசும் ஒரு வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவர்களுக்கு உதவவும் முன் வந்தார்கள். உதவித்தொகைகள் அவர்களை வீடியோ எடுத்து வெளியிட்ட கவுரவ் வாசன் என்ற யூடியூபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டன.

அதைத் தொடர்ந்து, ஒரே வீடியோவில் முதியவர்களின் வாழ்வு மாறிவிட்டதாக நெகிழ்ச்சியான செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ``தங்களுக்கு வந்த உதவித் தொகையில் கவுரவ் வாசன் முறைகேடு செய்துவிட்டார்’ என மால்வியா நகர் காவல் நிலையத்தில் காந்தா பிரசாத் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

காந்தா பிரசாத் மற்றும் அவர் மனைவியிடம் பேசிய வீடியோவை அக்டோபர் 7-ம் தேதி, தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார் கவுரவ். அந்த வீடியோவில் காந்தா பிரசாத்தும் அவரின் மனைவியும், ``காலை 6.30 மணிக்கு சமைக்கத் தொடங்குகிறோம். காலை 9.30 மணிக்கு பருப்பு வகைகள், கறிகள், ரொட்டிகள் மற்றும் அரிசி சாதம் ஆகிய உணவுகளுடன் எங்கள் உணவகம் செயல்படத் தொடங்குகிறது. ஆனால், கடந்த நான்கு மணி நேரத்தில் கிடைத்த வருமானம் வெறும் 50 ரூபாய் மட்டுமே. கொரோனாவுக்கு முன்பு அடுத்த நாளுக்கான வருமானமாவது கிடைத்தது. ஆனால், கொரானாவுக்குப் பிறகு நாங்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகிவிட்டோம். நாங்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டம் நடத்திவருகிறோம்” என்று கண்ணீருடன் தெரிவித்திருந்தனர்.

காந்தா பிரசாத்
காந்தா பிரசாத்

இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து உதவியும் பெறாமல் சொந்த உழைப்பில் வாழும் இந்தத் தம்பதி குறித்த அந்த வீடியோ பெரியளவில் வைரலானது. சமூக வலைதளம் மூலம் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், முதிய தம்பதியருக்கு உதவ முன் வந்தார்கள். பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகளில் ஆரம்பித்து சாமானிய மக்கள் வரை இந்த முதிய தம்பதியரின் உணவகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து, பொருளும், நிதி உதவிகளும் அளித்தனர்.

இதையடுத்து அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் வறுமை நீங்கி வாழ்வு மலர்ந்துவிட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த சூழலில்தான், கவுரவ் வாசன்மீது அதிரடி புகார் அளித்துள்ளார் காந்தா பிரசாத். அவர் தனது புகாரில், ``கவுரவ் வாசன் வேண்டுமென்றே அவரின் வங்கி விவரங்களையும் அவருடைய குடும்பத்தின் வங்கி விவரங்களையும் பகிர்ந்து நன்கொடையாக ஒரு பெரிய தொகையைச் சேகரித்துவிட்டார். எனது பெயரைப் பயன்படுத்தி திரட்டப்பட்ட நிதியை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

காந்தா பிரசாத்
காந்தா பிரசாத்

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை வாசன் முற்றிலும் மறுத்துள்ளார். தனக்கு வந்த மொத்த பணத்தையும் பிரசாத்தின் கணக்கில் மாற்றிவிட்டதாகக் கூறியுள்ள அவர், ``நான் வீடியோ எடுத்துப் பகிர்ந்தபோது, ​​இது பெரியதாக மாறும் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் பாபாவுக்குத் (பிரசாத்) தொல்லை கொடுப்பதை நான் விரும்பவில்லை. அதனால்தான் என் வங்கி விவரங்களைப் பகிர்ந்தேன் ” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு