`தங்கல்' மல்யுத்த குடும்பத்தில் ரித்திகா தற்கொலை... தோல்வியால் மனமுடைந்த துயரம்!
கடந்த புதன்கிழமை பரத்பூரில் நடந்த மல்யுத்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் ரித்திகா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய மல்யுத்த வீரர்களான கீதா போகத் மற்றும் பபிதா போகத்தின் உறவினரான ரித்திகா போகத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை பரத்பூரில் நடந்த மல்யுத்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் ரித்திகா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
17 வயதாகும் ரித்திகா, மல்யுத்தத்தில் புகழ்பெற்ற போகத் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரித்திகா மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் (junior women) மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். மார்ச் 14 அன்று நடந்த இறுதிப் போட்டியில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் ரித்திகா தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியைத் தாங்க முடியாமல் அவர் துயரமான முடிவை எடுத்திருக்கிறார்.

போட்டியின்போது அவரது பயிற்சியாளர் மகாபீர் சிங் போகத்தும் அங்கு அவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இந்திய அரசின் `துரோணாச்சார்யா' விருது பெற்றவர் ஆவார்.
ரித்திகாவின் குடும்பத்தினர் ஏற்கனவே மல்யுத்த விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. புதுடெல்லியில் 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று `போகத் சகோதரிகளாக' அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் கீதா போகத் மற்றும் பபிதா போகத்.
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் கீதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸிலும் இந்தியா சார்பாக அவர் கலந்துகொண்டார். இவர்களின் வாழ்கையைத் தழுவி வெளியான இந்தி திரைப்படமான `தங்கல்', பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இவர்கள் இருவரின் நெருங்கிய உறவினர்தான் ரித்திகா.
இந்தச் சகோதரிகளின் தங்கை ரிது போகத், தற்காப்பு கலைகள் கற்றவர். அவர் `ஒன் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர்களின் உறவினரான சகோதரி வினேஷ் போகத், உலகின் சிறந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர்களில் ஒருவர்.
வீர விளையாட்டான மல்யுத்தத்தில், உலகப் புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தன் முன்னோர்களைப் போல் சாதனை படைக்கவிருந்த நேரத்தில் ரித்திகா எடுத்திருக்கும் இந்த முடிவு மல்யுத்த வட்டாரத்தையும் அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரித்திகாவின் இழப்பு குறித்து கீதா போகத் ட்விட்டரில், ``பிரிந்து சென்ற அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இது குடும்பத்துக்கு மிகவும் வருத்தமான நேரம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. தோல்வி பயத்தால் யாரும் மனச்சோர்வடைந்து கடுமையான முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
திங்கள் கிழமை (மார்ச் 15) இரவு ரித்திகா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தாத்ரியில் உள்ள சிவில் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.