Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: மத்திய பணிக்கு படையெடுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள்?! - என்ன காரணம்?

பிரவின் பர்தேசி
பிரவின் பர்தேசி

சிவசேனா அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பாமல் மகாராஷ்டிராவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனராம்.

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி பதவிக்கு வந்தது. அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த பா.ஜ.க தனக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை முக்கிய பணிகளில் நியமித்திருந்தது. பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வந்த பிறகும் தொடர்ந்து அவர்கள் பணிகளில் இருந்தனர்.

அதோடு அவர்கள் பா.ஜ.கவுக்காக சிவசேனா கூட்டணி ஆட்சியை உளவு பார்த்து பா.ஜ.கவுக்கு தெரிவிக்கும் உளவாளிகளாக பதவியில் இருந்தனர் என்ற குற்றசாட்டும் நிலவியது. இந்நிலையில் பதவியில் இருந்த மாநில உளவுப்பிரிவு கமிஷனர் ரேஷ்மி சுக்லா, மாநில உள்துறை அமைச்சகத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் இடமாறுதலுக்கு லஞ்சம் வாங்குவது தொடர்பான தகவல்களை சேகரித்ததாகவும், அது தொடர்பான போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டு பதிவு செய்து பா.ஜ.க-விடம் கொடுத்துவிட்டு மத்திய பணிக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரேஷ்மி சுக்லா
ரேஷ்மி சுக்லா

மேற்கொண்டு மகாராஷ்டிராவில் இருந்தால் இலாகா பூர்வ விசாரணையை சந்திக்கவேண்டி வரும் என்று கருதி தானாக மத்திய பணியை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதே போன்று மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக்குக்கு எதிராக லஞ்ச ஊழல் புகார் செய்தார். அவரும் இப்போது முக்கியத்துவம் இல்லாத ஒரு துறையில் தான் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகளால் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாது பா.ஜ.க ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மத்திய பணிகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்களாம். தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்தால் சிவசேனா அரசு தங்களை பழிவாங்கக்கூடும் என்று கருதி அவர்கள் மத்திய பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநில ஜி.எஸ்.டி கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சஞ்சீஜ்குமார் தற்போது விமான நிலைய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மும்பை பெஸ்ட் பொது மேலாளராக இருந்த சுரேந்திர குமார், மத்திய வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரவீன் பர்தேசி சில மாதங்கள் ஐ.நா.சபையில் சர்வதேச திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அவர் மகாஷ்டிராவில் தலைமை செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்பதவி கிடைக்காத காரணத்தால் மீண்டும் மத்திய பணிக்கு சென்றுவிட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

முன்னாள் ஜி.எஸ்.டி. கமிஷனர் ராஜீவ் ஜலோடா 9 மாதங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்துவிட்டு இப்போது மும்பை துறைமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் டிஜிபி.ஜெய்ஸ்வால், மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநராக பதவியேற்றுக்கொண்டு மகாராஷ்டிராவை காலி செய்துள்ளார். இதே போன்று மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ்குமார் சர்மாவும் மத்திய பணிக்கு சென்றுவிட்டார்.

இந்த இடமாறுதல்கள் வழக்கமான ஒன்றுதான் என்றும் இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. அதோடு தேவேந்திர பட்நவிஸ் ஆட்சியில் செல்வாக்கோடு இருந்த சில அதிகாரிகள் இன்னும் செல்வாக்கோடுதான் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்று சில அதிகாரிகள் காத்திருந்துவிட்டு மத்திய பணிக்கு சென்றுள்ளனர் என்ற தகவலும் உலாவுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு