Published:Updated:

பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் கொடி...நீக்கச் சொன்னவருக்கு நேர்ந்தது என்ன?

'சென்சிடிவான நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிக்க முடியாது'

ஆர்.எஸ்.எஸ் கொடி நீக்கத்தால் சர்ச்சை
ஆர்.எஸ்.எஸ் கொடி நீக்கத்தால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டி-யில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் தற்கொலையால், கல்வி நிலையங்களில் மதரீதியில் செயல்படும் அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை நீக்கிய அலுவலர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் கொடி
ஆர்.எஸ்.எஸ் கொடி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி, மிர்ஷாபூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 'ஷாகாஸ்' என்ற கூட்டம் தினமும் காலையில் நடப்பது வழக்கம். நேற்றும் வழக்கம் போல இந்தக் கூட்டம் நடந்தது. அப்போது, பல்கலைக்கழக மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடிகள் நடப்பட்டிருந்தன. மாணவர்கள் யோகாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த பல்கலைக்கழக அலுவலர் கிரண் டாம்லே , ஆர்.எஸ்.எஸ் கொடிகளை அகற்றுமாறு மாணவர்களிடத்தில் கூறியிருக்கிறார்.

அயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்?

'இப்போதுள்ள சென்சிடிவான நேரத்தில், ஒரு மதம் சார்ந்த கொடியைப் பல்கலைக்கழக வளாகத்தில் நட அனுமதிக்க முடியாது' என்று மாணவர்களிடம் கிரண் டாம்லே கூறியுள்ளார். மாணவர்களோ, கொடியை அகற்ற மறுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, கிரண் டாம்லே அங்கே நடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடிகளை அகற்றினார். இதனால் கோபமடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை நீக்கிய கிரண் டாம்லேவை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை ராஜினாமா செய்யக் கூறியது. வேறு வழியில்லாமல், டாம்லே தன் பணியை ராஜினாமா செய்தார்.

பல்கலைக்கழக விதிகளின்படியே நான் செயல்பட்டேன். மதக் கொடிகளை வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது.
கிரண் டாம்லே

ஆனால், விஷயம் அத்துடன் முடிந்துபோய்விடவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், மிர்ஷாபூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் புகார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போலீஸில் புகார் அளித்தது. தொடர்ந்து கிரண் டாம்லே இந்து மதத்தை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நொந்துபோன கிரண் டாம்லே, ''பல்கலைக்கழக விதிகளின்படி, தனிப்பட்ட அமைப்புகளுக்கான கொடியை வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது. நான், என் கடைமையை மட்டுமே செய்தேன். கொடிகளை அகற்றுமாறு மாணவர்களிடத்தில் கூறினேன். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், நானே கொடிகளை அகற்றி பியூனிடம் கொடுத்தேன்'' என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

கிரண் டாம்லேவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ரத்தன்கர் மிஷ்ரா கூறுகையில், ''இந்தப் பல்கலைக்கழகத்தில், காலையில் மாணவர்கள் யோகா மற்றும் பிராணாயாம பயிற்சியில் ஈடுபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. மாணவர்கள் அதில் முறையாக ஈடுபட்டு வருகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த மதன் மோகன் மால்வியாவின் கடைசி ஆசை, தினமும் இந்தப் பயிற்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்க வேண்டும் என்பது. அத்தகைய, பாரம்பர்ய பயிற்சியை கிரண் டாம்லே அவமதித்துள்ளார்'' என்று குற்றம் சாட்டினார். அதேவேளை, ''கல்லூரி வளாகத்தில் மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தலையிடுவதும் கண்டிக்கத்தக்கது'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 30,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். 1916-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே மிகப் பெரியது.

''பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கவே என் மகள் (தற்போது ஐ.ஐ.டி) விரும்பினா். ஆனால், வட மாநிலங்களில் நிலவும் மத மோதல்கள் காரணமாக அவளை அங்கு அனுப்பவில்லை'' என்று, சென்னை ஐ.ஐ.டி–யில் சமீபத்தில் தற்கொலைசெய்துகொண்ட பாத்திமாவின் தாயார் கூறியது நினைவுகொள்ளத்தக்கது.