`4 தண்ணீர் பாட்டில்கள்; 370 கி.மீ நடைப்பயணம்’ – பெங்களூரிலிருந்து கிளம்பிய தொழிலாளர் குடும்பம்

இந்த அரசாங்கத்துக்கு எங்க மேல எல்லாம் அக்கறையே இல்ல. நாங்கள் வேலையிழந்தது பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை என ஆதங்கப்படுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் வேலையில்லை…. தங்குவதற்கு வீடும் இல்லை… அடுத்த வேளை உணவுக்கும் வழியில்லை என்ற நிலையில் பெங்களூரிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தங்களது சொந்த கிராமத்துக்கு நடைப்பயணமாக புறப்பட்டுவிட்டது ஒரு குடும்பம். கையில் குழந்தை, 4 தண்ணீர் பாட்டில்கள், சார்ஜ் செய்யப்பட்ட மொபைல்களுடன் பெங்களூரு சாலைகளில் நடந்து செல்கின்றனர் ராஜுவின் குடும்பத்தினர்.

கங்காவதி நகரத்துக்கு அருகில் உள்ள கிராமம்தான் ராஜுவுக்கு பூர்வீகம். பிழைப்புக்காக பெங்களூரு நகரத்துக்கு வந்துள்ளார். அம்மா, அப்பா, சகோதரி, மாமா, அத்தை அவர்களின் ஒன்றரை வயது மகள் ஆகியோருடன் ராஜு வசித்து வந்துள்ளார்.
ராஜு அவரது அப்பா மற்றும் மாமா ஆகியோர் கட்டட வேலைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கு உதவியாக பெண்களும் வந்தனர். பணிபுரியும் இடத்துக்கு அருகே தங்கி வேலை செய்துவந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லை, இதையடுத்து, அந்த இடத்தின் உரிமையாளர் இவர்களை அப்புறப்படுத்தியுள்ளார். ஊருக்குச் செல்லும் வழியில் பசிக்கு எதுவும் கிடைக்காது என்பதால் உணவு சமைத்து எடுத்துக்கொண்டனர். மேலும் வழிச்செலவுக்காக 1,400 ரூபாயுடன் பயணத்தைத் தொடங்கிவிட்டனர்.

ராஜு பேசுகையில், ``சொந்த ஊருக்குப் போனால் எங்கள் மீது அக்கறை கொள்ளவும் எங்களுக்கு ஆதரவாகவும் சிலர் இருப்பார்கள். இந்த நகரத்தில் யார் எங்களைப் பற்றி கவலை கொள்ளப் போகிறார்கள். யாரும் இல்லை. நாங்கள் இருந்த கட்டடத்தின் உரிமையாளர், நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். வேலையேயில்லை உங்களுக்கு வீணாக வாடகை கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டார். நாங்கள் இருந்த இடத்திலிருந்து பிரதான சாலைவரை கொண்டு வந்து இறக்கிவிட்டார். இந்த விஷயத்தில் அவரை மட்டும் முழுமையாக குற்றம் சொல்ல முடியாது. அவருக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டாமா.
கையில் 5 போன்களை வைத்துள்ளோம். நேற்று இரவு இவற்றை ஃபுல்லாக சார்ஜ் செய்தோம். இரண்டு போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஊருக்குப் போகும்வரை இதுதான், 4 வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் வைத்துள்ளோம். ஏதாவது லாரி அல்லது பேருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறோம். யாராவது எங்களுக்கு லிஃப்ட் தருவார்கள். எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றால் நடந்தே செல்வோம்’' என்றார் வேதனையுடன்.

பெண்கள் பேசுகையில், ``குழந்தையைத் தூக்கிட்டு சாலையில் நடப்பது அவ்வளவு எளிதல்ல. போலீஸாரால் 6 முறை தடுத்து நிறுத்தப்பட்டோம். குழந்தையும் எவ்வளவு நேரம்தான் தோளில் உட்கார்ந்துகொண்டு வருவாள். இந்த அரசாங்கத்துக்கு எங்க மீது எல்லாம் அக்கறையே இல்ல. அவர்களுக்கு நோயை விரட்ட வேண்டும். நாங்கள் வேலையிழந்தது பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை. எங்களால ரேஷன் பொருள்களைக் கூட வாங்கமுடியவில்லை” என்கின்றனர்.
Source: Times of India