Published:Updated:

`டெல்லியைத் திறக்கும் நேரம் வந்துவிட்டது; கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்!’ - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

`ஊரடங்கைத் தளர்த்துவதற்கு டெல்லி தயாராக இருக்கிறது’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் சில தளர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

டெல்லியில் கொரோனா நோய்த்தொற்றால் 4,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் அம்மாநிலத்தில் 64 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் கொரோனாவுடன் வாழ டெல்லி பழகிவிட்டது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ``டெல்லியை மீண்டும் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. கொரோனா வைரஸுடன் வாழ நாம் தயாராக இருக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதில் மாநில அரசு தயாராக இருக்கிறது. அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களும் சீல் வைக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மற்ற பகுதிகளை பச்சை மண்டலங்களாக தொடரலாம். ஒற்றை இலக்க அடிப்படையில் கடைகள் திறக்கலாம். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நோய்த்தொற்று ஏற்பட்டால் அதனை கையாளுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.

டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக மாற்றுவது இரண்டு பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். முதல் பிரச்னை வேலையிழப்பு. கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்னையைத் தாங்க முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இரண்டாவது காரணம், ஊரடங்கால் அரசால் எந்த வருவாயையும் ஈட்டமுடியவில்லை. நாங்கள் எப்படி சம்பளம் கொடுப்பது? அரசாங்கம் எப்படி செயல்படுவது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் குறைந்தது 3,500 கோடி வருவாய் ஈட்டுவோம். இந்தாண்டு 300 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளோம். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சம்பளம் கொடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு