Published:Updated:

பெங்களூரு டு டெல்லி விமானம்; ஆக்ராவுக்கு ரயில்! -தப்பிய கூகுள் ஊழியரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்

கொரோனா
கொரோனா

பெங்களூரில் வைரஸால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர், வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் என்று அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இப்படி இருந்தும் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளிலிருந்து தப்பிச் செல்லும் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

திருமணம்
திருமணம்

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும் ஆக்ராவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தம்பதி தங்கள் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்றிருந்தபோதுதான் இத்தாலியில் கொரோனா பரவல் அதிகமாக இருந்துள்ளது.

`காற்றில் 3 மணி நேரம்;  பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!' - ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்

இருவரும் இந்தியாவுக்கு வந்த பிறகு கூகுள் ஊழியருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. அதனால் அவர் பெங்களூரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் சென்ற மனைவிக்கும் தொற்று இருக்க வாய்ப்பிருப்பதாகச் சந்தேகித்த சுகாதார அதிகாரிகள், கடந்த 8-ம் தேதி மனைவியையும் அழைத்து சோதனை செய்துள்ளனர். ஆனால், அவர் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், பெங்களூரிலிருந்து தன் தாய் வீட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

கொரோனா
கொரோனா
AP

பெங்களூரிலிருந்து டெல்லி வரை விமானம் மூலமும் அங்கிருந்து ஆக்ரா வரை ரயிலிலும் பயணம் செய்துள்ளார். இறுதியாக அந்தப் பெண் இருக்கும் இடத்தைத் தேடி ஆக்ராவுக்கே சென்றுள்ளனர் அதிகாரிகள். அங்கு அவர் 8 பேர் பேர் கொண்ட தன் பெரிய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரும் அவரது மொத்த குடும்பமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

``எங்களின் மருத்துவக் குழு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது அவரது பெற்றோர், ஒரு ரயில்வே பொறியாளர் எனச் சிலர் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். மேலும், அந்தப் பெண் மீண்டும் பெங்களூருக்குச் சென்றதாகப் பொய் கூறினர். ஆனால், நாங்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறையின் உதவியுடன் வீட்டிலிருந்த அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து சோதனை நடத்தினோம். அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதும் மொத்த குடும்பத்தினரையும் காவலர்கள் உதவியுடன் தனிமைப்படுத்தியுள்ளோம்” என்று ஆக்ராவின் முதன்மை மருத்துவ அதிகாரி முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

`கொரோனா ஒரு கொடிய நோய் இல்லை. அது அதிகமாகப் பரவுமே தவிர உயிரிழப்புகள் இருக்காது. வயதானவர்கள், பலவீனமான ஆரோக்கியம் உடையவர்கள்தான் குறிப்பாக உயிரிழப்பார்கள். அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என்று கனடாவைச் சேர்ந்த அப்து ஷர்கவி என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து வைரஸ் சோதனை மேற்கொள்ள வேண்டும். வைரஸைக் கண்டு அஞ்சுவது நம் மூத்த தலைமுறையினரையும், இளைய தலைமுறையினரையும் அதிகம் பாதிக்கும். எனவே, வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகவே சிகிச்சைக்கு முன்வர வேண்டும்.

`கொரோனா பயமில்லை..  மக்களின் அச்சம்தான் எனது பயம்!' -மில்லியன் மக்களைச் கவர்ந்த மருத்துவரின் பதிவு
அடுத்த கட்டுரைக்கு