Published:Updated:

`விளம்பரத்துக்கு மனு..!'- மணிரத்னம் உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமிதா பச்சன், ஹிர்த்திக் ரோஷன் உள்ளிட்டோருக்கு எதிராகவும், கடந்த காலங்களில் சுதிர் ஓஜா வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

மணிரத்னம்
மணிரத்னம்

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதினர். இது மிகப் பரவலாக இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

மோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதம்
மோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதம்

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரைக் கெடுப்பதாகவும், சிறப்பாகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை செய்திதொடர்பாளர் ஜிதேந்திர குமார் என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,``இந்த வழக்கு தொடர்பாக மாவட்டக் காவல்துறை தலைவர், `இது ஒரு பொய்யான வழக்கு. விளம்பரத்துக்காக மனுதாரர் இப்படி செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார். மேலும் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளார். மேலும், எந்த ஒரு முறையான ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கை தாக்கல் செய்த புகார்தாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

மோடி
மோடி

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கைதாக்கல் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். மனுதாரர் சுதிர் ஓஜா, அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜான்ஷக்தி கட்சியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும், பிரபலங்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வது அவரது வழக்கம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமிதா பச்சன், ஹிர்த்திக் ரோஷன் உள்ளிட்டோருக்கு எதிராகவும், கடந்த காலங்களில் சுதிர் ஓஜா வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.