Published:Updated:

வலுக்கும் மரண தண்டனை குரல்கள்; தயாராகும் 10 தூக்குக் கயிறுகள்! -பீகார் சிறைக்குப் பறந்த உத்தரவு

தூக்குத்தண்டனை
தூக்குத்தண்டனை ( மாதிரி புகைப்படம் )

10 தூக்குக் கயிறுகளைத் தயாரிக்குமாறு பீகார் மத்தியச் சிறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை மீறல் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இப்போதெல்லாம் மரண தண்டனை வழங்குவது முற்றிலும் குறைந்துவிட்டது. ஆனால் இந்தியா, சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில் கொடூர குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

தண்டனை
தண்டனை
மாதிரி புகைப்படம்

பல நாடுகளில் தூக்கு, துப்பாக்கிச்சூடு, விஷ ஊசி, தலையைத் துண்டித்தல் போன்ற முறைகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை வழங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒன்றாகவே உள்ளது. கடைசியாக நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு 2013-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, இதுவரை யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை.

`காணவில்லை!’ - தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன்கள்... ஏன்?

இதற்கிடையில், அண்மைக்காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்தக் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. நிர்பயா விவகாரம் முதல் சமீபத்தில் நடந்த உன்னாவ் பெண் எரிப்பு வரையில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.

போராட்டம்
போராட்டம்

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதனால் அந்த வழக்கில் தொடர்புடைய வினய் சர்மா என்பவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில் பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் (Buxar) மத்திய சிறைச்சாலைக்கு, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், `10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க வேண்டும். அதற்கான பணியை விரைவில் தொடங்குங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Vikatan

இந்தியாவில் உள்ள பல சிறையில் தூக்குத்தண்டனை வழங்கும் இடம் உள்ளது. ஆனால், தூக்குக் கயிறு தயாரிக்கும் வசதி சில சிறைகளில் மட்டுமே உள்ளது. அதில் ஒன்றுதான் பக்சார் மத்திய சிறைச்சாலை.

இது குறித்துப் பேசியுள்ள பக்சார் சிறைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் அரோரா, ``10 தூக்குக் கயிறுகளைத் தயாரிக்குமாறு என் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தனை கயிறுகளும் எந்தச் சிறைக்குச் செல்லப் போகின்றன, யாருக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது போன்ற எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் கயிறுகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

பக்சார் சிறை
பக்சார் சிறை

இதே விவகாரம் குறித்து மேலும் சில தகவல்களைத் தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத பக்சார் சிறை அதிகாரிகள், ``அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அந்தக் கயிற்றை நாங்கள்தான் தயாரித்துக் கொடுத்தோம். கயிறு தயாரிக்கும் அனைத்து நடைமுறைகளும் எங்களுக்குத் தெரியும். சிறையில் உள்ள கைதிகளின் உதவியுடன் நாங்கள் அதைத் தயாரிப்போம்.

ஒரு கயிறு தயாரிக்க 3 முதல் 4 நாள்கள் தேவைப்படும். முன்னதாக இதன் விலை 1,725 ரூபாயாக இருந்தது, தற்போது பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் தூக்குக் கயிற்றின் விலையும் அதிகமாகிவிட்டது. தூக்கிலிடப்பட உள்ள நபரைவிட 1.6 மடங்கு அதிகமாக கயிற்றின் உயரம் இருக்க வேண்டும். முன்னதாக மொத்த இந்தியாவிலும் இந்தச் சிறையில் மட்டுமே தூக்குக்கயிறு தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது மேலும் சில சிறைகளில் கயிறு தயாரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பீகார் சிறைக்கு இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு