கேரளா விஸ்மயாவை தொடர்ந்து, பல வரதட்சணை மரண செய்திகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அந்த வகையில், பீகாரில் வரதட்சணைக்கான துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பற்றிய செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பீகாரின் நளந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காஜல் - சஞ்சித் குமார் தம்பதி. கடந்த வருடம் ஜுன் 27-ம் தேதி இவர்களுக்குத் திருமணம் முடிந்துள்ளது. அப்போது, இந்திய ரயில்வே துறையில் குருப் டி பிரிவில் பணியாற்றியுள்ளார் சஞ்சித் குமார். சமீபத்தில் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்க, அதைக் காரணம் காட்டிக் கூடுதலாக ரூ. 4 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளனர் சஞ்ஜித்தின் பெற்றோர் காஜலின் குடும்பத்தினரிடம்.
சஞ்ஜித்தின் பெற்றோருக்கு, காஜலின் அப்பா அரவிந்த் சிங் இந்த வருடம் பிப்ரவரி மாதம் ரூ.80,000 வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். ஆனாலும், சஞ்சித் குடும்பத்தினர் அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட, அது அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணின் கொலையில் முடிந்திருக்கிறது. ``அவர்கள் கேட்ட தொகையைக் கொடுக்காததே என் மகளின் இந்தத் கொடூரக் கொலைக்குக் காரணம்" என்கிறார் அரவிந்த் சிங்.
மேலும் அரவிந்த சிங்க் கூறும்போது, ``திடீரென்று, என் மகளை அவர்கள் வீட்டில் காணவில்லை என்று சஞ்சித் குடும்பத்தினர் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். என் மகளின் அலைபேசிக்கும் அழைப்புகள் செல்லவில்லை என்பதால் நான் சந்தேகமடைந்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்'' என்கிறார். அந்தப் புகாரின் மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுதான், துண்டு துண்டாக வெட்டப்பட்டு புகைப்பட்ட ஒரு சடலம் பற்றிய செய்தி கிடைத்திருக்கிறது.

நொனியா பிகா கிராமத்தில் கண்டுக்கப்பட்ட அந்த சடலத்தை, எரித்த தடயங்களும் கிடைத்த நிலையில், அது காஜலின் சடலம்தான் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். தன் மகளை கொலை செய்தது அவள் கணவர் மற்றும் குடும்பத்தினர்தான் என்று காஜலின் அப்பா அரவிந்த் சிங் புகார் கொடுக்க, ஹில்சா காவல் நிலையத்தில் சஞ்சித் குமார் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இன்னும் எத்தனை மகள்களை இழக்கப்போகிறோம் வரதட்சணைக்கு?!
- ஹரிணி ஆனந்தராஜன்