Published:Updated:

`தனிக் கட்டுப்பாட்டு அறை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! - மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல்

கோழிப்பண்ணையில் மருந்து தெளிக்கப்படுகிறது
கோழிப்பண்ணையில் மருந்து தெளிக்கப்படுகிறது

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுக்க பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால், கோழிக்கறியின் விலை வெகுவாகச் சரிந்திருக்கிறது.

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டுவருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்திலும் அதன் தாக்கம் தென்பட ஆரம்பித்திருக்கிறது. பர்பானி மாவட்டத்திலுள்ள முரும்பா என்ற கிராமத்தில் சுய உதவிக்குழு நடத்திவந்த கோழிப்பண்ணையில் மூன்று நாள்களுக்கு முன்னர் திடீரென 800 கோழிகள் இறந்துவிட்டன.

இறந்த கோழிகள் சோதனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இறந்த கோழிகள் சோதனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

அதன் மாதிரிகளை மாவட்ட நிர்வாகம், சோதனைக்காக அனுப்பிவைத்தது. அவை பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்திருப்பது ஆய்வில் தெரியவந்திருப்பதாக அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் தீபக் முக்லிகர் தெரிவித்தார். இதையடுத்து கிராமத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கோழி இறைச்சி வாங்க, விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பறவைக் காய்ச்சல் இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

பர்பானி மட்டுமல்லாது மும்பை மற்றும் அதையொட்டியுள்ள தானேயிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. மும்பையிலுள்ள செம்பூர் என்ற இடத்தில் 11 காகங்களும், தானேயில் 13 பறவைகளும் பறவைக் காய்ச்சலுக்கு இறந்துவிட்டன. இதையடுத்து தானேயில் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். அதில் தேவையான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி முதல்வர் தாக்கரே கேட்டுக்கொண்டார்.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
AP Photo/Prakash Elamakkara

இது குறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் சுனில் கேதார் பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில், மக்கள் கோழிக்கறி மற்றும் முட்டையை 70 டிகிரியில் நன்றாக வேகவைத்துச் சாப்பிடும் படி கேட்டுக்கொண்டிருக்கிறார். பறவைக் காய்ச்சல் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் கோழிக்கறி விலை கடுமையாகச் சரிந்திருக்கிறது. ஆனாலும், மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். குளிர்காலத்தில் கோழிக்கறி அதிக விலையில் விற்பனையாவது வழக்கம். ஆனால், பறவைக் காய்ச்சல் காரணமாக மக்கள் மத்தியில் கோழிக்கறியை வாங்க அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு