Published:Updated:

‘விலங்குகளையும் கொடுமைப்படுத்தும் கொரோனா’ - பசியினால் கொத்துக் கொத்தாக மடியும் பறவைகள்

பறவைகள்
பறவைகள்

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் விலங்குகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன

கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு மொத்த மனிதக்குலமும் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் மனிதர்கள், நாடு, பொருளாதாரம் மட்டுமல்லாமல் விலங்குகளும், பறவைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. மனித நடமாட்டம் இல்லாததால் காடுகளில் வாழும் விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. ஆனால் நகரங்களில் இருக்கும் நாய், பறவைகள் போன்றவை உணவின்றித் தவித்து வருகின்றன.

பறவை
பறவை

பெரிய நகரங்களில் இருக்கும் மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகள் பெரும்பாலும் மனிதர்கள் தரும் உணவையே நம்பி வாழ்கின்றன. சாலையோரக் கடைகள், காய்கறி மார்கெட்டுகள் போன்ற இடங்களில் கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்தன. தற்போது ஊரடங்கால் நூற்றுக்கணக்கான பறவைகள் உணவின்றி உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மங்களூருவின் பல பகுதிகளில் ஒரு நாளுக்குக் குறைந்தது 2 பறவைகளாவது உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் துறை துணை இயக்குநர் டாக்டர் ஜெயராஜ் கூறுகையில், “ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள், நாய்கள் போன்றவற்றிற்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவில்லாமல் பசியால் தினமும் பல நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிகின்றன. இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 கிலோ வரை தானியங்கள் வாங்கி பறவைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வைக்க முடிவெடுத்துள்ளோம்.

பறவை
பறவை

மக்களும் தங்களால் முடிந்த உணவு மற்றும் நீரை பறவைகளுக்காக வீட்டு மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வையுங்கள். உணவு இல்லாததால்தான் தங்களுக்குக் கிடைக்கும் கடினமான உணவை உட்கொண்டு பறவைகள் உயிரிழக்கின்றன’ என்று கூறியுள்ளார். மனிதர்களுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு விலங்கு, பறவைகளுக்கும் உணவு முக்கியம் அதனால் ஊரடங்கு முடியும் வரை பறவைகளுக்கு உணவு வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு