Published:Updated:

மார்க்கெட்டில் தொங்கிய உடல்! - மே.வங்கத்தை உலுக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ மரணம்

பா.ஜ.க எம்.எல்.ஏ
பா.ஜ.க எம்.எல்.ஏ

மேற்குவங்கத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் மார்க்கெட் பகுதியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம் வடக்கு தினாபூர் மாவட்டம், ஹேம்தாபாத் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தேபேந்திரநாத் ராய். இவர் தன் வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலையில் உள்ள மார்க்கெட்டில் ஒரு மொபைல் கடையின் வராண்டாவில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார். அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் எம்.எல்.ஏ-வின் நிலையைப் பார்த்து அதிர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் தேபேந்திர நாத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மேற்குவங்க காவலர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``ஹேம்தாபாத் பகுதி எம்.எல்.ஏ-வின் உடல் மார்க்கெட்டிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவரது பாக்கெட்டில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது அதில் தற்கொலைக்குக் காரணமாக இரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதற்குள் மக்கள் தாங்களாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு வதந்தி பரப்ப வேண்டாம் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் : `சைலன்சர் துப்பாக்கி; பாதுகாப்பு தோல்வி’ - குடும்பத்துடன் கொல்லப்பட்ட  பா.ஜ.க தலைவர்

ஆனால், `எம்.எல்.ஏ இறந்தது தற்கொலை இல்லை அது கொலை' என அவரது குடும்பத்தினரும் பா.ஜ.க-வினரும் கூறிவருகின்றனர். ‘நேற்று நள்ளிரவு ஒரு மணிக்குச் சிலர் வந்து எம்.எல்.ஏ-வை அழைத்து சென்றுள்ளனர். எனவே, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர் தற்போது பதவியிலிருந்த எம்.எல்.ஏ என்பதால் இந்த இறப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்’ எனத் தேபேந்திர நாத்தின் உறவினர் ஒருவர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, ``மேற்குவங்கத்தின் ஹேம்தாபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்திர நாத் படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது மம்தா அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியையே காட்டுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு அரசாங்கத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு