Published:Updated:

உத்தரப்பிரதேசம்: `கொரோனா நிலை குறித்துப் பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம்தான்!’ -பாஜக எம்.எல்.ஏ

பா.ஜ.க எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோர்
பா.ஜ.க எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோர்

"கொரோனா நிலை குறித்து, நான் அதிகம் பேசினால் என் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படலாம், எனவே நான் பேசாமல் இருப்பதே நல்லது!” என பாஜக எம்.எல்.ஏ தன் சொந்தக் கட்சி குறித்தே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திவரும் பாதிப்புகள் நாட்டையே அவல நிலைக்குத் தள்ளியுள்ளன. சிகிச்சையளிக்கப் போதுமான படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தகனம் செய்ய இடமில்லாதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது தேசம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் சற்று மோசமாகவே இருக்கின்றன. கான்பூர், உன்னாவ் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களிலிருந்து கொரோனாவால் பலியாவோரின் உடல்களை முறைப்படி தகனம் செய்யாமல், இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்களில் கொண்டுவந்து, கங்கை நதியில் வீசுவதாக வரும் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து ஊடகங்களிலும், இணையத்திலும் பேசப்பட்டுவரும் நிலையில் உ.பி அரசாங்கம் இந்த விவகாரத்தில் மௌனம் காத்துவருகிறது. இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் பா.ஜ.க அரசின் தலைவர்கள் சிலரும் மாநிலத்தின் கொரோனா நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்

இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், சீத்தாபூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் சூழலில், அங்குள்ள சிகிச்சை மையங்கள் எதுவும் செயல்படாமல் பூட்டுப்போட்ட நிலையிலேயே இருந்துவருகின்றன. இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம், சீத்தாபூர் தொகுதியின் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோரிடம் பத்திரிகையாளர்கள், `தேவைப்படும் நேரத்தில் ஏன் சிகிச்சை மையங்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் எம்.எல்-ஏக்கள். எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... ஒரு எம்.எல்.ஏ நினைப்பதை அப்படியே பேச முடியுமா? எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்றால், இது குறித்து அதிகம் பேசினால், நாங்களும் தேசத்துரோக வழக்கைச் சந்திக்க வேண்டிவரும். நான் எனது உணர்வுகளை முன்பே தெரிவித்திருக்கிறேன். இது பற்றி உங்களிடம் நான் இனி பேசாமல் இருப்பதே எனக்கு நல்லது” என்றார். பிறகு, கொரோனா அதிகரித்துவரும் சூழலில் ஏன் இன்னும் உ.பி-யில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பபியதற்கு, ``எல்லாம் சரியான வழியிலேயே நடந்துகொண்டுவருகிறது. என்னால், அரசாங்கம் மேற்கொள்ளும் செயல்களைச் சரியானது என்று வழிமொழிய மட்டுமே முடியும்” என்று அவர் தன் உள்ளுணர்வை மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சொந்தக் கட்சியைக் குறித்த ராகேஷ் ரத்தோரின் சர்ச்சைக் கருத்துகள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கொரோனா முதல் அலை சமயத்தில், மோடியின் வேண்டுகோளை விமர்சித்து அவர் பேசிய ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனது. அதில், ``பிரதமர் மோடி, மக்களைக் கைகளைத் தட்டச் சொல்வதும், மணி அடிக்கச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. கைகளைத் தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா... உங்களைப் போன்றவர்கள் கைகளைத் தட்டினால் கொரோனா அகன்றுவிடுமா?" என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு