Published:Updated:

`ராகுல் சொல்வது தவறு.. லாக்டௌனால் வெற்றி தான்!’ -விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

``ராகுல் காந்தி தவறான தகவல்களைக் குறிப்பிடுகிறார். நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று நாள்கள் வீதம் இரட்டிப்பானது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 13 நாள்கள் ஆகின்றன.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். அவ்வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியும் இன்று, `கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு திட்டம் தோல்வியடைந்துள்ளது. நாட்டில் வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. அதை எதிர்த்துப் போராட மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?' என்பது உட்பட பல்வேறு கேள்விகளின் வழியாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார். காங்கிரஸின் விமர்சனங்களுக்கு பா.ஜ.க தற்போது பதிலளித்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இதுதொடர்பாக பேசுகையில், ``ராகுல் காந்தி தவறான தகவல்களைக் குறிப்பிடுகிறார். நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று நாள்கள் வீதம் இரட்டிப்பானது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 13 நாள்கள் ஆகின்றன. ஊரடங்கால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளை விடவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இது ஊரடங்கிற்கான வெற்றி. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் ஏன் என்று காங்கிரஸினர் கேள்வி எழுப்பினார்கள். தற்போது ஊரடங்கு தளர்வையும் எதிர்க்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராடும் நேரத்தில் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அரசியல் செய்கிறார்கள். வைரஸுக்கு எதிராக இந்தியா எடுக்கும் முயற்சிகளை உலகமே பாராட்டுகிறது. ஆனால், காங்கிரஸினர் அதை எதிர்க்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

`லாக்டௌன் தோல்வி; அடுத்து என்ன?’ - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ராகுல் காந்தி

தொடர்ந்து பேசிய அவர், ``இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு காங்கிரஸ் செய்துவரும் அரசியலுக்கு எடுத்துக்காட்டு. 3000-க்கும் மேற்பட்ட ரயில்களில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சென்றுள்ளனர். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்று. பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்தில் உதவி வழங்கப்பட்டது. சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு ஐந்து மாதத்துக்கான இலவச ரேஷன், 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000, 20 கோடி பெண்களுக்கு ரூ.500 மற்றும் இலவச சமையல் எரிவாயு ஆகியன வழங்கப்படுகின்றன. ஆனால், ராகுல் காந்தி ரூ.7,500 வழங்க சொல்வதைவிட அதிகமான உதவிகள் இவை” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் - பா.ஜ.க
காங்கிரஸ் - பா.ஜ.க

மேலும், ``எதிர்மறையான அரசியலை மக்கள் எப்போதும் விரும்புவதில்லை. மக்கள் ஒருபோதும் பொய்களைக் கேட்க மாட்டார்கள். நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஆனால், காங்கிரஸ் மட்டும் வித்தியாசமாக நடந்துகொள்கிறது. அதனால், தான் அந்தக் கட்சி மக்களிடம் இருந்து விலகியே இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis
அடுத்த கட்டுரைக்கு