Published:Updated:

மேற்கு வங்கம்: 'மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி மீது தார்ப்பாய்களைத் திருடியதாக வழக்குபதிவு!'

மம்தா - சுவேந்து அதிகாரி
மம்தா - சுவேந்து அதிகாரி

அத்துறைக்கு பொறுப்பாளராக சுவேந்து அதிகாரியே செயல்பட்டு வந்துள்ளதால் அவரும் இந்த மோசடியின் கூட்டாளி என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது

மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து அதிகாரியின் கூட்டாளியும், கிழக்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருமான ராகல் பெரா பண மோசடி வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்தோடு, நகராட்சிக்கு அளிக்கப்பட நிவாரணப் பொருட்களை திருடிவிட்டதாக சுவேந்து அதிகாரி மீதும் அவரது சகோதரர் சோமேந்து அதிகாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராகல் பெரா என்பவர் கடந்த 2018ம் ஆண்டு அம்மாவட்டத்தை சேர்ந்த சுஜித் தே என்பவருக்கு, அப்போது பா.ஜ.க.வின் தலைமையில் இருந்து வந்த நீர்ப்பாசன துறையில் கொல்கத்தாவில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி தற்போது அவர் போலீஸாரில் புகாரளித்ததையடுத்து ராகல் பெராவை போலீஸார் கைது செய்துள்ளனர். இதேபோல் ராகல் பெரா பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது. விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அப்போது அத்துறைக்கு பொறுப்பாளராக சுவேந்து அதிகாரியே செயல்பட்டு வந்துள்ளதால் அவரும் இந்த மோசடியின் கூட்டாளி என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை அறிய முற்பட்ட ஊடகங்களுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த யாஸ் புயல் பாதிப்பின் காரணமாக அரசின் சார்பில் மிட்னாப்பூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தார்ப்பாய்களை மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து அதிகாரியும், அவரது சகோதரர் சோமேந்து அதிகாரியும் திருடிவிட்டதாக அந்நகராட்சி ஊழியரான ரந்தீப் மன்னா அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் கந்தி நகராட்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சுவேந்துவின் நற்பெயரை கெடுக்க ஒரு சிலர் செய்யும் சதிச்செயல் என்று சுவேந்து அதிகாரியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான மேற்கு வங்கத்தின் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வந்தது. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டுமென்று பா.ஜ.க. நினைத்தது அதற்காக திரிணாமுல் காங்கிரஸின் பக்கம் பலம் வாய்ந்த கைகள் மற்றும் மம்தாவின் விசுவாசிகள் பலருக்கு வலைவீசியது. அந்த வலையில் சிக்கியவர் தான் மம்தாவின் விசுவாசிகளுள் ஒருவரான சுவேந்து அதிகாரி. பல்வேறு திட்டங்களைத் தீட்டிய பா.ஜ.க-வின் கூற்று இறுதியில் பொய்த்துப்போனது. நினைத்ததை விட அதிகப்படியான இடங்களைப் கைப்பற்றி மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும் கூட மம்தாவின் சொந்த தொகுதியான நந்திகிராம் தொகுதியைக் கைப்பற்றினார் பா.ஜ.க. சார்பில் நின்ற சுவேந்து அதிகாரி. அப்போது முதல், திரிணாமுல் காங்கிரஸின் மீது வெறுப்பு மனநிலையை உண்டாக்க நின்று போன பழைய நாரதா வீடியோ வழக்கு முதலானவற்றை தூசுதட்டி எடுத்து சிபிஐ பக்கம் திசைதிருப்பியது, பா.ஜ.க. அதில் திரிணாமுல் காங்கிரஸில் பொறுப்பிலிருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால், அதில் சம்பந்தப்பட்ட சுவேந்து அதிகாரியை சிபிஐ கைது செய்யவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா அவர்களை விடுவிக்க கோரி நேரிலேயே சென்று பல மணி நேரம் வாதாடினார்.

இதற்கெல்லாம் சேர்த்து பழிதீர்க்கும் எண்ணத்துடனே திரிணாமுல் காங்கிரஸ் தரப்பினர் தற்போது பா.ஜ.க மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர் என்று குற்றம்சாட்டி வருகின்றனர் மேற்கு வங்கத்தின் பா.ஜ.க. வட்டாரத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு