Published:Updated:

`அரசியலாக்காதீர்கள்.. அன்று அபிநந்தன் ரஃபேலில் பறந்திருந்தால்..!’- முன்னாள் விமானப்படை தளபதி தனோவா

பாதுகாப்புத் துறையின் ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கக் கூடாது என விமானப்படையின் முன்னாள் தளபதி தானோ தெரிவித்துள்ளார்.

அபிநந்தன்
அபிநந்தன்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

முன்னாள் விமானப்படை தளபதி தனோவா
முன்னாள் விமானப்படை தளபதி தனோவா

இதையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோரமாகக் கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது.

ரஃபேல் போர் விமானம்... காங்கிரஸ் முதல் பி.ஜே.பி. வரை... நடந்தது என்ன? #AtoZReport

இந்த நிலையில், அன்று மட்டும் அபிநந்தன் ரஃபேல் விமானத்தில் சென்றிருந்தால் தாக்குதலே வேறுவிதமாக இருந்திருக்கும் என விமானப்படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

மும்பை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ``பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சண்டையின்போது, அபிநந்தன் மட்டும் மிக்-21-க்குப் பதிலாக ரஃபேலில் பறந்திருந்தால் அன்று போரே வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், அபிநந்தனால் ஏன் ரஃபேலில் பறக்கமுடியவில்லை? ஏனெனில் எந்த விமானம் வாங்க வேண்டும் என முடிவு செய்யவே பத்து வருடங்கள் ஆகிவிடுகிறது.

ரஃபேல்
ரஃபேல்

பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் இந்தியாவின் மொத்த அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். இதுமட்டுமல்லாது மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்திலேயே நகரத்தொடங்குகின்றன. போஃபோர்ஸுக்குப் பிறகு நல்ல துப்பாக்கிகள் எப்போது வரும்? (போஃபோர்ஸ் - அதிநவீன பிரமாண்டத் துப்பாக்கி) போஃபோர்ஸ் மிகவும் சிறந்த துப்பாக்கி. ஆனால், ரஃபேல் போல அதற்கும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு அதுவும் சர்ச்சையில் சிக்கியது.

எஸ்-400 ஏவுகணை அமைப்பு ஒரு கேம் சேஞ்சர். அதைப் பெறுவது அரசாங்கத்தின் மிகச் சிறந்த ஒப்பந்தம். பாதுகாப்புத் துறை கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தில் தற்போது நாம் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.