Published:Updated:

நடிகை பூனம் பாண்டே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - அடித்து உதைத்த கணவன் கைது!

சாம் தன் மனைவி பூனம் பாண்டேவை தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில், பூனம் பாண்டே ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மும்பை புறநகர்ப் பகுதியில் வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாம், தன் மனைவி பூனம் பாண்டேவை தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில், பூனம் பாண்டே ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பூனம் பாண்டே தன் கணவர்மீது போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர் கணவரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

பூனம் பாண்டே - சாம்
பூனம் பாண்டே - சாம்

சாம் தாக்கியதில் பூனம் பாண்டேவுக்குக் காயங்கள் அதிகமாக ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். சாம் ஏற்கெனவே பலமுறை பூனம் பாண்டேவைத் தகராறில் தாங்கியிருக்கிறார். இருவரும் திருமணமான புதிதில் கோவாவுக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சாம், பூனம் பாண்டேவை அடித்து உதைத்தார். அதில், பூனம் பாண்டே கொடுத்த புகாரின் பேரில் சாம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பூனம் பாண்டேவும் அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அடித்தவருடன் சேர்ந்து வாழ முடியாது" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் மீண்டும் ஊடகங்களை அழைத்து, ``எங்களுக்குள் இருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடன் இருக்கிறோம். திருமணம் என்றால் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நான் இப்போது சாமை மிகவும் நேசிக்கிறேன்" என்று காதல் பொங்கத் தெரிவித்திருந்தார். ``பூனமும் சாமும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். திருமணத்துக்குப் பிறகுதான் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவருகிறது'' என்கின்றனர் நடிகை பூனம் பாண்டேவுக்கு நெருக்கமானவர்கள்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு