Published:Updated:

`நாட்டுக்கான சேவை இது!' -கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் செவிலியராகக் களமிறங்கிய நடிகை

ஷிகா மல்ஹோத்ரா
ஷிகா மல்ஹோத்ரா

மக்களுக்கான சேவையில் கலையாக இருந்தாலும் அல்லது மருத்துவமாக இருந்தாலும் அதில் எனது பங்கு இருக்கும்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

இதுவரை இந்நோய் பாதிப்பிற்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் தாக்கத்தை எதிர்த்து மருத்துவர்களும் செவிலியர்களும் இரவுபகலாகப் போராடிவருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷிகா மல்ஹோத்ராவும் தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் செவிலியராகக் களமிறங்கியுள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் 'ஃபேன்' திரைப்படத்தில் நடித்தவர் ஷிகா மல்ஹோத்ரா. இவர் டெல்லி வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்ஸிங் பட்டப்படிப்பை முடித்தவரும்கூட. இதனால் கொரோனாவுக்கு எதிரான சேவையில் செவிலியராகக் களமிறங்கியுள்ளார். மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் மருத்துவமனையில், தற்போது தன்னார்வ செவிலியராக இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஷிகா, ``மருத்துவ சேவையாற்றுவதற்கான கருவிகள் என்னிடம் உள்ளன. மக்களுக்கான சேவையில் கலையாக இருந்தாலும் அல்லது மருத்துவமாக இருந்தாலும் அதில் எனது பங்கு இருக்கும். அதேபோன்று அரசு அறிவித்திருப்பதைப் போன்று அனைவரும் வீட்டிலேயே இருந்து, தங்களையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். அதையடுத்து "மற்றொரு பதிவில் மருத்துவம் சார்ந்த பட்டம் பெற்றவர்கள். இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஷிகா மல்ஹோத்ரா
ஷிகா மல்ஹோத்ரா

ஷிகா மல்ஹோத்ரா, கடந்த மாதம் வெளியான 'காஞ்சலி' திரைப்படத்தில் சஞ்சய் மிஷ்ராவுடன் நடித்திருந்தார். இவருடைய இந்த மருத்துவச் சேவை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுதொடர்பாக அவருக்குப் பலரும் இன்ஸ்ட்ராகிராமில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு