உத்தரப்பிரதேசத்தில், அவசர அவசரமாக ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணத்தில், மணமகனின் குடும்பத்தார் மறைத்த விஷயத்தைக் கண்டுபிடிக்க, மணமகளின் அண்ணன் செய்த செயலால், உண்மை தெரியவந்தது. இதனால் திருமணமே நின்றுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பருச்சாபாத் மாவட்டத்திலுள்ள கோத்வாலி கிராமத்தில், ஜனவரி 19-ம் தேதியன்று ஒரு திருமணம் நடைபெறவிருந்தது. அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திருமணத்தில், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மாப்பிள்ளை குதிரைமேல் ஊர்வலம் வர சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தன.
இப்படி நல்லபடியாக எல்லாம் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில், 23 வயதாகும் மணமகனின் செயல்கள் அங்கிருந்த பூசாரிக்குச் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. இதை மணமகள் வீட்டாரிடமும் உடனே கூறியிருக்கிறார்.

அதன் பிறகு மாப்பிள்ளை மனநலம் குன்றியவரா என்பதைக் கண்டுபிடிக்க மணமகளின் அண்ணன், பூசாரியிடம் 10 ரூபாய் நோட்டுக்கட்டுகளைக் கொடுத்து, மாப்பிள்ளையை எண்ணித் தருமாறு கூறியிருக்கிறார். பூசாரியும் மாப்பிள்ளையிடம் அதைக் கொடுக்க, மாப்பிள்ளையோ அதைச் சரியாக எண்ண முடியாமல் தடுமாறியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகளின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குறித்து அவரின் குடும்பத்தினர் பொய் சொல்லியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக மணமகளும், `அந்த நபரைத் திருமணம் செய்ய மாட்டேன்' எனக் கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நுழைந்த போலீஸ் அதிகாரி கம்தா பிரசாத், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், மணமகன் வீட்டினர் உண்மையை மறைத்துவிட்டனர் எனக் கூறிய மணமகளின் குடும்பத்தினர், தங்களுடைய மகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டாள் என உறுதியாகக் கூறிவிட்டனர். மணமகளும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.