Published:Updated:

`நல்லவேளை நான் இப்போது கேரளாவில் இருக்கிறேன்!’ - நெகிழ்ந்த பல்கேரிய கால்பந்து பயிற்சியாளர்

கேரளாவில் டிமிட்டர் பாண்டேவ்
கேரளாவில் டிமிட்டர் பாண்டேவ்

ஐரோப்பாவில் கொரோனா ஏற்படுத்திய பேரிடரை நான் கேள்விப்படுகிறேன். கொடிய கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் கேரளாவில் இருப்பதை நினைத்து, நான் பாக்கியம் செய்தவனாக உணர்கிறேன்.

கொரோனா தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாக அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே கொரோனா தடுப்பில் கேரளா அதிக கவனத்துடனும் அதீத வீரியத்துடனும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் தனது பரிசோதனை வளையத்தை விரிவுபடுத்தியது.

கேரளாவில் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அம்மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்தது. இதைப் பலரும் பாராட்டி வந்த நிலையில், தற்போது பல்கேரிய நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் கேரள அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கடந்த மார்ச் மாதம் 4 -ம் தேதி கேரளாவுக்கு வந்தார், டிமிட்டர் பாண்டேவ். பின்னர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் பகுதியில் தங்கியுள்ளார். தற்போது அவர் கேரளாவுக்கு வந்தது தொடர்பாகவும் இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

``துபாயில் இருக்கும் என் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் கேரளாவில் தொழில்முறை பயிற்சி மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக கேரளா வந்தேன்” என்றவர்

``கேரளாவில் எனக்குக் கிடைத்த வரவேற்பு என்பது மிகப் பெரியது. அதைத் தாண்டி கேரளா தன்னுள்ளே கொண்டுள்ள இயற்கை எனக்குள் பிரமிப்பைத் தந்தது. கடவுளின் தேசம் என்ற பெயருக்குப் பொருத்தமான ஊர்” என்றார். தொடர்ந்து கொரோனா தொடர்பாகப் பேசியவர், ``நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவ, நாடு முழுவதும் லாக் டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமைச்சர் ஷைலஜா
அமைச்சர் ஷைலஜா

எந்த நிலையிலும் நான் சொந்த ஊரில் இல்லாததை நினைத்து கவலை கொள்ளவில்லை. முதல்வர் பினராயி விஜயன் இந்த பேரிடரை முன்னின்று எதிர்கொள்வதுடன், அவரது அமைச்சரான ஷைலஜா டீச்சருடன் இணைந்து செயல்பட்டு சிறப்பாகக் கையாள்கிறார். பேரிடர் மேலாண்மையில் இது எனக்குப் பெரும் பாடமாக இருக்கிறது. பேரிடரை அவர்கள் கையாளும்விதத்தை நான் உடனிருந்து ஆச்சர்யத்துடன் கவனிக்கிறேன். கொரோனா போன்ற கொடிய நோய்க்கு எதிராக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

பட்டாம்பி நகராட்சியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்னைத் தினமும் தொடர்புகொண்டு பரிசோதனை செய்கின்றனர். நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என எனக்கு அறிவுரைகள் வழங்கிறார்கள். அதன்படியே நான் செயல்படுகிறேன், தினமும் என்னை போன் மூலம் தொடர்புகொண்டு எனது உடல்நலம் தொடர்பாக விசாரிக்கின்றனர்” என்றார்.

ஐரோப்பாவில் கொரோனா ஏற்படுத்திய பேரிடரை நான் கேள்விப்படுகிறேன். கொடிய கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் கேரளாவில் இருப்பதை நினைத்து, நான் பாக்கியம் செய்தவனாக உணர்கிறேன். நான் விரைவில் முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும், அமைச்சர் ஷைலஜா டீச்சர் அவர்களையும் சந்தித்து எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளர்.

அடுத்த கட்டுரைக்கு