Published:Updated:

உ.பி தேர்தல்: நொய்டா சென்டிமென்டை முறியடித்தவர்... யோகி ஆதித்யநாத் படைத்த ஆறு சாதனைகள்!

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்துக்கு பா.ஜ.க இதுவரை நான்கு முதல்வர்களைக் கொடுத்திருக்கிறது. மற்ற மூவர் மீண்டும் தேர்தலை சந்தித்தபோது அவர்கள் ஆட்சியை இழந்தார்கள். ஆனால், யோகி மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

உ.பி தேர்தல்: நொய்டா சென்டிமென்டை முறியடித்தவர்... யோகி ஆதித்யநாத் படைத்த ஆறு சாதனைகள்!

உத்தரப் பிரதேசத்துக்கு பா.ஜ.க இதுவரை நான்கு முதல்வர்களைக் கொடுத்திருக்கிறது. மற்ற மூவர் மீண்டும் தேர்தலை சந்தித்தபோது அவர்கள் ஆட்சியை இழந்தார்கள். ஆனால், யோகி மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

Published:Updated:
யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. தன் செயல்களாலும் அதிரடிகளாலும் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். அவர் இந்தத் தேர்தல் வெற்றி மூலம் ஆறு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

* ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த ஒரு முதல்வர், மீண்டும் ஆட்சிக்கு வருவது உத்தரப் பிரதேசத்தில் இதுவே முதல் முறை. சுதந்திரத்துக்குப் பிறகு உ.பி மாநிலம் உருவாகி முதல் தேர்தல் 1952-ம் ஆண்டு நடந்தது. அப்போது முதல் கடந்த 70 ஆண்டுகளில் யாரும் செய்யாத இந்தச் சாதனையை யோகி படைத்திருக்கிறார்.

இதற்கு முன் காங்கிரஸ் சார்பில் ஆட்சி செய்த நான்கு முதல்வர்கள் திரும்பவும் தேர்தலில் வென்று முதல்வராகி இருக்கிறார்கள். 1957-ல் சம்பூர்ணானந்தா, 1962-ல் சந்திரபானு குப்தா, 1974-ல் ஹெச்.என்.பகுகுணா, 1985-ல் என்.டி.திவாரி ஆகியோர் மீண்டும் முதல்வரான வரலாறு உண்டு. ஆனால், அவர்களில் யாரும் அதற்குமுன்பு ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பதவியில் இருந்ததில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்தவர்கள்.

பிரதமருடன் யோகி ஆதித்யநாத்
பிரதமருடன் யோகி ஆதித்யநாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* கடந்த 70 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் 21 முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. அவர்களில் மூன்றே மூன்று பேர் மட்டுமே ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தவர்கள். யோகிக்கு முன்பு பதவியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுமே அவர்கள். அதன்பின் அந்த சாதனையைச் செய்திருக்கும் யோகிக்கு, அதை மீண்டும் ஒருமுறை செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

* கடந்த 37 ஆண்டுகளில், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த ஒரு கட்சிக்கு உ.பி மக்கள் மீண்டும் வாய்ப்பு தந்ததில்லை. 1985-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஜெயித்து ஆட்சிக்கு வந்தது. அதன்பின் ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி என்று எல்லாமே மாறி மாறி ஆட்சி செய்தன. ஆட்சியில் இருக்கும் கட்சியை அடுத்த தேர்தலில் மக்கள் கவிழ்த்து விடுவார்கள். 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றை யோகி முறியடித்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* உத்தரப் பிரதேசத்துக்கு பா.ஜ.க இதுவரை நான்கு முதல்வர்களைக் கொடுத்திருக்கிறது. கல்யாண் சிங், ராம்பிரகாஷ் குப்தா, தற்போதைய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மற்ற மூவர். மீண்டும் தேர்தலை சந்தித்தபோது அவர்கள் ஆட்சியை இழந்தார்கள். ஆனால், யோகி மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

* கடந்த 15 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து முதல்வர் நாற்காலியில் அமரும் முதல் நபர், யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் சட்ட மேலவையும் இருக்கிறது. மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவருமே எளிதாக எம்.எல்.சி ஆகி முதல்வர் பதவியேற்றார்கள். யோகியுமே கடந்த முறை எம்.எல்.சி ஆகியே முதல்வராகப் பதவியேற்றார். இம்முறை தன் சொந்த மண்ணான கோரக்பூரில் ஜெயித்து சட்டமன்றத்தில் நுழைந்து முதல்வர் பதவியேற்கிறார் அவர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

* ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் ஏதேனும் விழாவில் பங்கேற்றால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது. அதேபோல நொய்டாவில் ஏதேனும் விழாவில் பங்கேற்றால் முதல்வர் பதவி போய்விடும் என்ற நம்பிக்கை உ.பி-யில் இருக்கிறது. டெல்லியை ஒட்டியிருக்கும் தொழில் நகரமான நொய்டா பெரும் வளர்ச்சி பெற்ற பகுதி. உ.பி முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங், இங்கு ஒரு விழாவில் பங்கேற்ற சில நாள்களில் பதவியை இழந்தார். என்.டி.திவாரி இங்கு வந்து போனபிறகு தேர்தலில் ஆட்சியை இழந்தார். அதனால் முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் ஆகியோர் இங்கு வருவதையே தவிர்த்தார்கள். ஏதேனும் விழா என்றாலும் டெல்லி அல்லது லக்னோவில் வைத்து நடத்திவிடுவார்கள். இதை மீறி இங்கு வந்த மாயாவதியும் அடுத்த ஆண்டு ஆட்சியை இழந்தார்.

யோகி தீவிர மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து நொய்டா வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். நொய்டாவில் அரசு விழாவில் பங்கேற்றும் ஆட்சியை இழக்காத ஒரே முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அந்த வகையில் நொய்டா சென்டிமென்டை அவர் முறியடித்துவிட்டார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism