Published:Updated:

40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி!- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்

`இதன்மூலம், அங்கு வாழ்பவர்கள் வீட்டுக்கடன் பெற்று தங்களுக்கான சொந்த வீடுகளைக் கட்டிக்கொள்ள இயலும்'.

delhi
delhi

டெல்லியில், அங்கீகாரமற்ற நிலப்பகுதிகளில் வசித்துவந்த 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் குழுவில் முடிவெடுத்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப்  பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், மத்திய அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுத்துள்ளதாகவும் தொலைநோக்குப் பார்வையோடு, முற்போக்கான சிந்தனை கொண்டு எடுத்துள்ள இப்புரட்சிகர நடவடிக்கை மூலமாக, ஏறத்தாழ 1,800 காலனிகளுக்கு ஒப்புதல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்பவர்கள், இதன்மூலம் வீட்டுக்கடன் பெற்று தங்களுக்கான சொந்த வீடுகளைக் கட்டிக்கொள்ள இயலும் என்று கூறினார்.

delhi
delhi

இம்முடிவானது, டெல்லியின் வளர்ச்சிக்கான ஆணையத்தால் (Delhi Development Authority-DDA) அடையாளம் காணப்பட்டுள்ள 69 இடங்களுக்கு இது பொருந்தாது என்று குறிப்பிட்டார். கடந்த 2008ல் இவ்விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி கொடுத்த வாக்குறுதி, 2021 ஆனாலும் நிறைவேறாது என்று கூறிய அவர், மத்திய அரசு இந்த விவகாரத்தில் விரைவாக முடிவெடுத்துள்ளதென்றும், வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், “இத்திட்டம், பிரதமர் மோடியின் எண்ணங்களே தவிர, இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. இத்திட்டத்தின் விளைவாக அங்கு வாழும் மக்களுக்கு மின்வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பு, பூங்கா முதலியவை கிடைக்கும்” எனக் கூறினார். இதுகுறித்து பேட்டியளித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாம் ஒப்புதலுக்காகக் காத்திருக்கவில்லை என்றும், ஆதரவற்ற நிலையில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்கெனவே 6000 கோடி செலவில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்துகொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

central ministers
central ministers

டெல்லியின் மீதான அதிகாரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே  பகிரப்பட்டுள்ளதால், டெல்லி அரசாங்கம் 200 சதுர கி.மீட்டருக்கு மேல் நிலம் வைத்திருப்போரிடம் மட்டும் இப்பகுதிக்கான மதிப்பில் ஒரு சதவிகித்தை விலையாக கோரியுள்ளது.