Published:Updated:

`கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?!’ - மத்திய அமைச்சர் விளக்கம்

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கமளித்திருக்கிறார்.

`கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்’ என்று வதந்தி பரவியிருக்கிறது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார். `கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர், `தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்மைதான்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

லேசான காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வலி, உடம்புவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அவை தற்காலிகமானவைதான். சிறிது நேரத்தில் சரியாகிவிடும்’ என்று தெரிவித்திருக்கிறார். `கொரோனா தடுப்பூசியால் கொரோனா தொற்று ஏற்படுமா?’ என்ற சந்தேகத்துக்கு அளித்திருக்கும் பதிலில், `கொரோனா தடுப்பூசியால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஆனால், ஏற்கெனவே கொரோனா தொற்று இருக்கலாம். கொரோனா தடுப்பூசி போடப்படும் வரை எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கலாம். தடுப்பூசிக்குப் பிறகு அதன் அறிகுறிகள் தென்படலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். `தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?’ என்பதற்கு பதிலளித்திருக்கும் ஹர்ஷ் வர்தன், `கொரோனா தடுப்பூசியால் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை. கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாகத் தெரியவில்லை. அரசு தெரிவிக்கும் அதிகாரபூர்வ தகவல்களை மட்டுமே இதில் நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆதாரமற்ற செய்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி, நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நாளை முதல் போடப்படவிருக்கிறது. இதற்காக, கொரோனா தடுப்பூசி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படும் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. எனவே, தடுப்பூசியை முதலில் பிரதமர் நரேந்திரமோடி போட்டுக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன

நாட்டில் 2,934 கொரோனா தடுப்பூசி மையங்களிலிருந்து முதல் நாளில் மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படவிருக்கிறது. முதற்கட்டமாக 30 கோடி அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு