அர்ஷ் நந்தன் பிரசாத் என்பவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சையில் உள்ளார். ஐ. டி ஊழியரான இவர், வாழ்வின் கடினமான சூழலிலும் வேலை தேடி ஆன்லைன் இன்டர்வியூவில் பங்கேற்ற புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரல் ஆனது. அவரின் இந்த விடாமுயற்சியை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கீமோதெரபி சிகிச்சையினால் தனது முடியை இழந்துள்ள இவரின் நிலைமையைக் கண்டு பலரும் அவருக்கு வேலைதர முன்வரவில்லை. இந்நிலையில், மருத்துவமனையின் கட்டிலில் மருத்துவமனை உடையோடு அமர்ந்து, வேலைக்கான இன்டர்வியூவை அட்டெண்ட் செய்யும் புகைப்படத்தை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டு, ``நான் என்னதான் நேர்காணலில் சிறப்பாகச் செய்திருந்தாலும், வாழ்க்கையில் கடினமான காலத்தில் இருக்கும் ஒருவர் நிராகரிக்கப்படுவது, இந்த நிறுவனங்கள் எவ்வளவு தாராளமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
நான் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறேன் என தெரிந்ததும் அவர்களின் முகபாவங்கள் மாறுகின்றன. உங்களின் அனுதாபம் எனக்குத் தேவை இல்லை. நான் யார் என்பதை நிரூபிக்கவே இங்கு வந்தேன்" என கூறியிருந்தார்.

பலரும் இவருக்காக பிரார்த்தனை செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதை கவனித்த மகாராஷ்டிராவில் உள்ள அப்ளைடு கிளவுட் கம்ப்யூட்டிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான நிலேஷ் சத்புட், அவரை போர்வீரர் என அழைத்ததோடு, வேலை தேடுவதை நிறுத்திவிட்டு முதலில் உங்களின் சிகிச்சையை முடியுங்கள், நீங்கள் எப்போது வேலையில் சேர தகுதியுடையவராகக் கருதுகிறீர்களோ, அப்போது என்னுடைய நிறுவனத்தில் வந்து சேரலாம், எந்த இன்டர்வியூவும் இருக்காது'' என கூறியுள்ளார்.