Published:Updated:

``இவரின் ஆசை இதுதான்!''- கேன்சர் பாதித்த மாணவியால் நெகிழ்ந்து போன போலீஸ் கமிஷனர்

ரம்யாவுக்கு போலீஸ் கமிஷனராகப் பணிபுரியவேண்டும் என்று ஆசை. இதையறிந்த தன்னார்வ அமைப்பினர், ராட்ஷகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத்திடம் தெரிவித்தனர்.

ரம்யா
ரம்யா ( Photo: TOI )

கொடிய நோயால் அவதிப்படுவோருக்கு மனமாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிற வகையில் செயல்பட்டு வருகிறது, ஹைதராபாத் தன்னார்வ அமைப்பு ஒன்று.

ஹெச்.ஐ.வி., கேன்சர் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளோ, மருத்துவமனை அறைகளுக்குள்ளோ முடங்கிக் கிடப்பார்கள். இத்தகைய நோய்களால் அவர்களின் வாழ்வும் மனமும் நொறுங்கிப் போயிருக்கும். அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் அவர்கள் விரும்புவதையோ, ஆசைப்படுவதையோ நிறைவேற்றித்தந்து மகிழ்ச்சியூட்டுகிறார்கள், இந்த அமைப்பினர்.

ரம்யா
ரம்யா
ANI

ரம்யா, பழைய அல்வால் பகுதியைச் சேர்ந்த நரசிம்மா - பத்மா தம்பதியரின் மகள். இந்த மாணவி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்யாவுக்கு போலீஸ் கமிஷனராகப் பணிபுரியவேண்டும் என்று ஆசை. இதையறிந்த தன்னார்வ அமைப்பினர், ராட்ஷகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத்திடம் தெரிவித்தனர்.

`கைகொடுத்த காரின் வாசகம்.. விறுவிறு சேஸிங்..'- 7 நிமிடத்தில் கடத்தப்பட்ட இளைஞரை மீட்ட போலீஸ்!

நல்ல பணியென உணர்ந்த கமிஷனரும் இதற்கு ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டார். அதன்படி, ரம்யாவுக்கான கமிஷனர் உடை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. அதை அணிந்துகொண்டு கமிஷனர் அலுவலகம் வந்த ரம்யா ஒருநாள் கமிஷனராகப் பதவியேற்றுக் கொண்டார். காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ரம்யா ஏற்றுக்கொண்டார்.

ரம்யா
ரம்யா
ANI

பின்னர், அணிவகுத்திருந்த காவலர்கள் முன்னிலையில் 'காவல் ஆணையர்' ரம்யா பேசும்போது, ``சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்கப் போராட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கான தனிப்படையை இன்னும் விரிவாக்கி மேம்படுத்த வேண்டும்" என்றார். இந்த உருக்கமான காட்சியைக் கண்டு காவலர்கள் நெகிழ்ந்து போயினர். ஏற்பாடு செய்த அமைப்பிற்கும், மனமுவந்து அனுமதியளித்த கமிஷனர் மகேஷ் பகவத்துக்கும், தெலங்கானா காவலர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. காவலர்கள், இறுகிய மனம் கொண்டவர்கள் என்ற பொதுக் கருத்தை இத்தகைய நிகழ்வுகள் பொய்யாக்கி விடுகின்றன. நோயாளிகளின் மறுவாழ்வும் இவற்றால் மெய்யாகிறது.