Published:Updated:

`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை!'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்

தமிழர் `கேப்டன்' தமிழ்ச்செல்வன்
தமிழர் `கேப்டன்' தமிழ்ச்செல்வன்

11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் மும்பை தமிழர்களுக்கு ஓர் உதவி என்றால் முதல் ஆளாக ஓடுவார். இவரின் இந்தக் குணத்துக்காகவே மும்பை தமிழர்கள் இவரை `கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்று அழைப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முறையும் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. பா.ஜ.க அதிகபட்சமாக 102 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. முதல்வர் பங்கீடு தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் தமிழர்கள் கொண்டாடும் வகையிலான ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

மும்பை மாநகரின் முக்கிய சட்டசபைத் தொகுதி சயான் - கோலிவாடா தொகுதி. லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கும் இந்தப் பகுதியை `மினி மெட்ராஸ்' என்றே அழைக்கிறார்கள். தமிழர்கள் கைகாட்டுபவர்களே இந்தப் பகுதியில் அரசியல்வாதிகளாக கோலோச்சிவந்தனர். இருந்தாலும் 30 ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியம் என்ற தமிழர் மட்டுமே எம்.எல்.ஏவாக மகாராஷ்டிரா சட்டசபைக்குள் சென்றார். அதன்பிறகு தமிழர்கள் யாருமே அங்கு அரசியலில் பெரிய அளவில் கோலோச்சவில்லை என்ற குறையைத் தீர்த்துவைத்தவர் கேப்டன் தமிழ்ச்செல்வன். கடந்த 2014-ம் ஆண்டு சயான் - கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் சிவசேனா வேட்பாளரைவிட 2,733 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Vikatan

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்கோட்டை அருகே உள்ள பிலாவிடுதி என்கிற கிராமம்தான் இவரின் சொந்த ஊர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகக் கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ்ச்செல்வனை மும்பை விமான நிலையத்தில் விட்டுவிட்டு ஓடிவிட, மும்பை ரயில் நிலையங்களில் கூலியாக வேலைபார்த்து முன்னேறியவர். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் மும்பை தமிழர்களுக்கு ஓர் உதவி என்றால் முதல் ஆளாக ஓடுவார். இவரின் இந்தக் குணத்துக்காகவே மும்பை தமிழர்கள் இவரை `கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்று அழைப்பார்கள் எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டவர் எம்.எல்.ஏ-வானார்.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடமும் தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கம் உண்டு. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று அவரின் தோஸ்த்தாக வலம்வந்துகொண்டிருக்கிறார். இந்த முறையும் அதே சயான் - கோலிவாடா தொகுதியில் தமிழ்ச்செல்வன் களமிறங்கினார். கடந்த முறை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா இந்த முறை ஆதரவளித்தாலும் காங்கிரஸ் புதிய குடைச்சலை உருவாக்கியது. தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழர் தமிழ்ச்செல்வனுக்கு எதிராக மற்றொரு தமிழரையே வேட்பாளராக களமிறங்கியது காங்கிரஸ்.

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

நெல்லையிலிருந்து சென்று மும்பையில் செட்டில் ஆன மும்பை யாதவ சங்கத்தின் தலைவரும் அப்பகுதியில் பிரபல தொழிலதிபரான நம்பிராஜனின் மகன் கணேஷ்குமார் யாதவ்வை தமிழ்ச்செல்வனுக்கு எதிராக அறிவித்தது காங்கிரஸ். கணேஷ்குமார் அந்தப் பகுதி யூத் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவரும் மக்கள் மத்தியிலும் அறிமுகமான நபர், நன்கு படித்தவர் என்பதால் தமிழ்ச்செல்வனுக்கு இந்த முறை தேர்தல் களம் மிகுந்த டப் கொடுக்கும் எனப் பேசப்பட்டது.

கணேஷ்குமார் யாதவ்
கணேஷ்குமார் யாதவ்

ஆனால், அதை தவிடுபொடியாக்கியுள்ளார் கேப்டன் தமிழ்ச்செல்வன். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கணேஷ்குமாரைவிட 14,225 வாக்குகள் அதிகமாகப் பெற்று கடந்த முறையைவிட இந்த முறை அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். இவர் 54,677 (மொத்த வாக்கு சதவிகிதத்தில் 42.35%) வாக்குகள் பெற்றார். கணேஷ்குமார் 40,452 வாக்குகள் பெற்றார்.

`355 ரன் பார்ட்னர்ஷிப், திருப்பம் தந்த முதல்தர கிரிக்கெட்!' - இந்திய அணி Vs தமிழர் முத்துசாமி
அடுத்த கட்டுரைக்கு