Election bannerElection banner
Published:Updated:

மும்பை: நள்ளிரவு 1 மணிக்கு வந்த கார்; 20 ஜெலட்டின் குச்சிகள்! - அம்பானியின் வீட்டைத் தாக்க முயற்சி?

அம்பானியின் வீட்டைத் தாக்க முயற்சி?!
அம்பானியின் வீட்டைத் தாக்க முயற்சி?!

காரின் நம்பர், அம்பானிக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கார் ஒன்றின் நம்பரோடு ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது. காரில் வேறு சில நம்பர் பிளேட்களும், மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடிதத்தில்...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மும்பையின் தென்பகுதியில் வசித்துவருகிறார். அங்கு அவருக்குச் சொந்தமான அடுக்குமாடி சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது. இந்த பங்களாவின் மேல் தளம், ஒரேநேரத்தில் இரண்டு ஹெலிகாப்டர் வந்து இறங்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. அண்டிலியா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தக் கட்டடத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் கேட்பாரற்று கார் ஒன்று நின்றது. அம்பானி வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த கார் யாருக்கு சொந்தம் என்று விசாரித்தபோது யாரும் உரிமை கோரவில்லை.

மர்ம கார்
மர்ம கார்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஸ்கார்பியோ காரை சோதனை செய்து பார்த்தபோது உள்ளே வெடிக்கும் தன்மைகொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அவை வெடிகுண்டுகளாக இல்லாமல் அப்படியே இருந்தன. நேற்று முன்தினம் இரவு 1:00 மணியிலிருந்து அந்த கார் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸார் சோதனைக்காக அனுப்பிவைத்திருக்கிறார்கள். மர்ம நபர் அம்பானியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் காரைக் கொண்டு வந்து நிறுத்தினார்களா அல்லது போலீஸாருக்கு பயந்து காரைக் கொண்டு வந்து நிறுத்தினார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. காரின் நம்பர் அம்பானிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கார் ஒன்றின் நம்பரோடு ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது. காரில் வேறு சில நம்பர் பிளேட்களும், மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சமீபத்தில் இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் அம்பானியின் வீட்டுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அம்பானியின் வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். இதில் காரை நிறுத்திய நபர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காரிலேயே இருந்திருக்கிறார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ``இந்தச் சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர்” என்று தெரிவித்தார். உள்துறை இணையமைச்சர் சம்புராஜ் தேசாய் கூறுகையில், ``அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது குறித்து முழு விசாரணை நடத்தும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அம்பானியின் வீட்டுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் அம்பானியின் வீட்டுக்கு அருகில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

அம்பானியின் வீடு தெற்கு மும்பையிலுள்ள அல்டமண்ட் ரோட்டில் கடலை நோக்கி இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு கட்டும்போது 15,000 கோடி. அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 2014-ம் ஆண்டு 2 பில்லியன் டாலர். இந்தக் கட்டடத்தை அமெரிக்க நிறுவனம் வடிவமைத்தது. ஆஸ்திரேலியா நிறுவனம் கட்டி முடித்தது. 27 மாடிகள்கொண்ட இந்த வீடு 168 கார்களை நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டிருக்கிறது. உலகின் மிகவும் விலை மதிப்புமிக்க பங்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக அம்பானியின் அண்டில்லா வீடுதான் மிகவும் விலை மதிப்பு மிக்கது. இங்கு 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தியேட்டர், ஸ்பா, யோகா சென்டர், தியான மையம், நடன ஸ்டூடியோ, ஐஸ்க்ரீம் பார்லர், வெளியிலிருந்து வருபவர்களைக் குளிர்விக்க ஐஸ் ரூம் என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அண்டிலியா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அம்பானியின் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டபோது மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் பெட்ரோலிய தொழிலில் மட்டும் ஈடுபட்டுவந்த அம்பானி இப்போது தொலைபேசி, ஜவுளி, பிளாஸ்டிக், சில்லறை வியாபாரம் போன்ற அனைத்திலும் கொடிகட்டிப்பறக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு