Published:Updated:

பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கிய கார்; ஆபரேஷனுக்கு அவசரம் - ஓடியே மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்

டாக்டர் கோவிந்த்

போக்குவரத்து நெருக்கடியில் கார் சிக்கியதால் டாக்டர் ஒருவர் நோயாளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக 3 கிலோமீட்டர் ஓடியிருக்கிறார்.

பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கிய கார்; ஆபரேஷனுக்கு அவசரம் - ஓடியே மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்

போக்குவரத்து நெருக்கடியில் கார் சிக்கியதால் டாக்டர் ஒருவர் நோயாளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக 3 கிலோமீட்டர் ஓடியிருக்கிறார்.

Published:Updated:
டாக்டர் கோவிந்த்

கர்நாடக மாநிலம், பெங்களூரு பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. நாட்டின் ஐடி தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூரு, கடந்த வாரம் பெய்த மழையால் தத்தளித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீராக இருந்தது. வீடுகளும் கடைகளும் தண்ணீரில் மிதந்தன. இந்த நிலையில் பெங்களூரிலுள்ள மணிப்பால் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆபரேஷனை டாக்டர் கோவிந்த் நந்தகுமார் என்பவர் செய்யவிருந்தார். டாக்டர் கோவிந்த் மருத்துவமனைக்குச் செல்ல தனது காரில் புறப்பட்டார். நகரம் ஏற்கெனவே மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடியாக இருந்தது.

சர்ஜாபூர் - மராத்தாஹல்லி சாலையில் டாக்டரின் கார் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. கார் மேற்கொண்டு செல்வதற்கு வழியே இல்லை. வேறு எந்த வாகனத்திலும் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருந்தது. அதே சமயம் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாக வேண்டும். ஆபரேஷனுக்காக நோயாளி காத்துக்கொண்டிருந்தார். கார் நின்ற இடத்திலிருந்து 3 கிலோமீட்டருக்கும் அதிகான தூரத்தில் மருத்துவமனை இருந்தது.

பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கிய கார்; ஆபரேஷனுக்கு அவசரம் - ஓடியே மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்

எப்படியும் மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, தனது டிரைவரிடம் `காரை மருத்துவமனைக்கு எடுத்துவா’ என்று சொல்லிவிட்டு டாக்டர் கோவிந்த் காரிலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தார். இது குறித்து டாக்டர் கோவிந்த் கூறுகையில், ``மருத்துவமனையை 10 நிமிடங்களில் அடைந்துவிட இருந்த நிலையில் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் எனக்கு பதற்றமாகிவிட்டது. ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால் நோயாளிக்கு எப்படியும் குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக மேற்கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பாமல் இறங்கி ஓட ஆரம்பித்தேன். நோயாளியை ஆபரேஷனுக்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும் என்று கூறியிருந்தோம். எனவே நோயாளியை அதிக நேரம் காக்கவைக்கக் கூடாது என்பதற்காக ஓடினேன்.

ஏற்கனவே அடிக்கடி உடற்பயிற்சி செய்திருந்ததால் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி, மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷனைச் செய்து முடித்தேன். இது போன்ற ஓர் இக்கட்டான நெருக்கடியைச் சந்திப்பது இது முதன்முறை கிடையாது. பல முறை காரிலிருந்து இறங்கி நடந்து சென்றிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

டாக்டர் கோவிந்த், கடந்த 18 ஆண்டுகளாக பல முக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்துவருகிறார். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை நடத்தியிருக்கிறார்.